இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு இல்லை.. ஆனால்..!! உடனே இதை செய்ய வேண்டும் - ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..
இந்தியாவில் குரங்கம்மை( MPOX)பாதிப்பு எதுவும் இல்லை ஒன்றிய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. MPox பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது.
MPox எனப்படும் குரங்கம்மை நோய் முதலில் ஆப்ரிக்க நாடுகளில் கண்டறியப்பட்டது. தற்போது ஐரோப்பிய, ஆசியா என 100க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை பரவியிருக்கிறது. ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் உலகளாவிய சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று பரவல் அதிகரித்து வருவதால், இந்திய அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வருபவர்களை, பரிசோதனை செய்தபிறகே அனுமதிக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தவும் மத்திய அரசு உத்தரப்பட்டுள்ளது
மேலும் காய்ச்சல் தோலில் உடலில் சிறு கொப்பளங்கள் தலைவலி, தசைபிடிப்பு, உடல் சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் உளிட்ட குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்பட்டால் அல்லது நோய் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமாக இருந்திருந்தால் உடனடியாக அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. குரங்கம்மை பாதிப்பு தொடர்பான தகவல்களை ihip.mohfw.gov.in/cbs/#!/ என்கிற இணையதளத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.,
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதலாக தற்போது வரை குரங்கமை பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை எனவும், இந்தியாவின் குரங்கம்மை( MPox) நோயினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் தாக்கம் பெரிய அளவிற்கு இருக்காது என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.