“வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளது”- அதிமுக, பாஜகவினர் மனு

 
voters

கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் 11,700 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பதிவாகியுள்ளதாக கூறி அதிமுக  சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் மற்றும் பாஜக பிரமுகர்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.  

voter id card

கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் 11,700 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு செய்யப்பட்டுள்ளது என குற்றம் சாட்டி கிணத்துக்கடவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் மற்றும் பாஜக தெற்கு மாவட்ட தலைவர், முன்னாள் மாவட்ட தலைவர் உள்ளிட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தாமோதரன் கூறுகையில், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் மட்டும் சுமார் 11,700  வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பதிவாகியுள்ளது. இதே போன்று அனைத்து தொகுதிகளிலும் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தொகுதிக்கு உள்ளேயே ஒவ்வொரு பெயரும் வார்டுகள் மாறி மாறி இரண்டு முறை பதிவு செய்யப்பட்டுள்ளது.  எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதேபோல் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால் தண்ணீர் எந்த அளவிற்கு மாசு அடைந்துள்ளது என்பது எல்லாம் அறிந்ததே,  தற்போது திருப்பூரில் இருந்தும் கழிவுகள் கொண்டுவரப்பட்டு கொட்டப்படுவதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் பெரும் போராட்டத்தை சந்திக்க கூடிய சூழல் உருவாகியுள்ளது அதனை சரி செய்ய வேண்டும் என்றார்.