லீவு எடுத்த மாணவர்களுக்கும் கேக் உண்டு! – தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் வெளியிட்ட மாஸ் ஆர்டர்

 
1

தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: 

குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என, 61 லட்சத்து, 84,566 பேருக்கு ‘கேக்’ வழங்கப்பட உள்ளது. வரும், 10ம் தேதிக்குள் விற்பனையாளர்கள், ‘கேக்’கை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைப்பர். அதே நாளுக்குள் பாடநுால் கழகம் வாயிலாக, வாழ்த்து அட்டைகள், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வந்து சேரும். 

தொடர்ந்து, நவ., 11, 12ம் தேதிகளில், பள்ளிகளுக்கு கேக், வாழ்த்து அட்டைகள் அனுப்பப்படும். இவற்றை, 13ம் தேதி பயனாளிகள் அனைவருக்கும் வழங்க வேண்டும். உணவு ஒவ்வாமை, உணவு கட்டுப்பாடு உள்ள மாணவர்களை, முன்கூட்டியே கண்டறிந்து, தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மாணவர்கள் கைகளை கழுவிய பின், அனைவருக்கும் ஒழுங்காகவும், சமமாகவும் வழங்க வேண்டும். எந்த மாணவரும் விடுபடக்கூடாது. அந்நாளில் வராத மாணவர்களுக்கு, கேக்குகளை பாதுகாப்பாக வைத்து, பள்ளி வரும் நாட்களில் வழங்க வேண்டும். குறிப்பாக, வாழ்த்து அட்டை, அனைத்து மாணவர்களுக்கும் கிடைப்பதை, உறுதி செய்ய வேண்டும். 

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.