தமிழகத்திற்குள் மீண்டும் லாட்டரியைக் கொண்டு வருவதே இவர்களின் நோக்கம் - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்..!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், லால்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாரிவள்ளலை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது உரையாற்றிய அவர், "நம் திமுக வேட்பாளர் பாரி வள்ளலை எதிர்த்து, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். லீமா ரோசின் குடும்ப சொத்து மதிப்பு ரூ.6,000 கோடி. அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவர்களுக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி வைத்துள்ளது.
லீமா ரோசின் குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஏனென்றால், எப்படியாவது தமிழ்நாட்டிற்குள் மீண்டும் லாட்டரியை கொண்டு வர வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த குடும்பத்தின் நோக்கம். லால்குடி மக்களை பணத்தால் வென்று விடலாம் என்று தப்புக்கணக்கு போட்டு லால்குடி தொகுதியில் லீமா ரோஸ் போட்டியிடுகிறார். இது சுயமரியாதை மண் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
எனவே, திமுக வேட்பாளர் பாரி வள்ளலுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை திமுக வேட்பாளர் பாரிவள்ளலை குறைந்தது 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
லால்குடி தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய பேருந்து நிலையம், கூட்டுக் குடிநீர் திட்டம், அரசு மருத்துவமனையில் தாய்-சேய் நலப் பிரிவு கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை திமுக அரசு நிறைவேற்றி உள்ளது. வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை கருத்தில் கொண்டு திமுகவுக்கு மக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்தார்.



