24 மணி நேரமும் படங்களை திரையிட அனுமதிக்கனும் - திரையரங்க உரிமையாளர் சங்கம் கோரிக்கை..
திரையரங்குகளில் 24 மணி நேரமும் திரைப்படங்களை திரையிட அனுமதி அளிக்க வேண்டுமென தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், “அண்டை மாநிலங்களில் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது போல தமிழ்நாட்டிலும் அனுமதி வழங்கப்பட வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சிதான் திரையிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதி தர வேண்டும். அப்படி அனுமதிப்பதால் அநேக வேலை வாய்ப்புகள் உருவாகும்.
மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 250 ரூபாய்க்கும், ஏ.சி. திரையரங்குகளில் 200 ரூபாய்க்கும் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த அனுமதிக்க வேண்டும். திரையரங்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் புதிய திரைப்படங்களை திரையிட வேண்டும். பிற மாநிலங்களில் திரையிடப்பட்ட பின் தமிழ்நாட்டில் படங்கள் திரையிடப்படும் போது நஷ்டம் ஏற்படுகிறது.
பெரிய நடிகர்களின் திரைப்படங்களை 8 வாரங்களுக்கு பின்னரும், அடுத்த வரிசையில் உள்ள நடிகர்களின் படங்களை ஆறு வாரங்களுக்கு பின்னருமே OTT-யில் வெளியிட வேண்டும் என தங்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. யூ டியூபில் எதிர்மறையான விமர்சனங்கள் வைக்கப்படுவதால் திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் நரிக்குறவர்கள் உட்பட அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்பதே திரையரங்கத்தினரின் நிலைப்பாடு. யாருக்கும் எந்தவிதமான கட்டுப்பாட்டையும் திரையரங்குகளில் விதிக்கவில்லை” என்று கூறினார்.