“யாருயா எச்சில் துப்புனது... இப்ப கீழ இறங்கி வரணும்”... தனியார் பேருந்தை வழிமறித்த இளைஞர்கள்
![க்ட்](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/841b9fec80bd82585ec25554e3452730.png)
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தனியார் பேருந்தில் சென்ற பயணி ஒருவர் துப்பிய எச்சில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது பட்டதாக கூறி பேருந்தை மறித்து ரகளை செய்த இளைஞர்களால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து பெங்களூர் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் சாலையில் பேருந்து சென்றபோது பேருந்தில் இருந்த அடையாளம் தெரியாத பயணி ஒருவர் பான் பராக் போட்டு எச்சிலை ஜன்னல் வழியாக துப்பியுள்ளார். அது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது நண்பர்களோடு சேர்ந்து ஆத்துமேடு ஜங்ஷனில் அந்த பேருந்தை வழி மறித்தார். பேருந்தை மறித்த இளைஞர்கள், “யாருடா எச்சிலை துப்பியது? மரியாதையாக இறங்கி வாங்க இல்லையென்றால் இந்த பேருந்து இங்கிருந்து நகராது” என்று பேருந்தை மறித்து அரை மணி நேரமாக ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு விரைந்து வந்த போலீசார், “என்னப்பா பிரச்சனை? ஏன் பேருந்தை மறிக்கின்றீர்கள்” என்று கேட்ட போது, “சார் நான் பைக்ல வரும்போது என் மீது எச்சிலை துப்பிட்டாங்க யாருன்னு கேட்டா யாருமே கீழ வர மாட்றாங்க” என்று அந்த இளைஞர் கூறினார்.
”யாருயா பாக்கு போட்டு எச்சில் துப்புனது... இப்ப கீழ இறங்கி வரணும்”... தனியார் பேருந்தை வழிமறித்த இளைஞர்கள்... கடைசி வர யாரென்றே சொல்லாமல் மௌனம் காத்த பயணிகள்... பஞ்சாயத்தை தீர்த்து வைத்த போலீஸ்... நள்ளிரவில் நடந்த பரபரப்பு சம்பவம்#Dindigul | #PrivateBus | #saliva | #PolimerNews pic.twitter.com/35nvgSDgS5
— Polimer News (@polimernews) July 9, 2024
அதை தொடர்ந்து போலீசார் பேருந்தில் ஏறி விசாரித்த போது யாருமே வாய் திறக்கவில்லை. பின்பு அங்கிருந்த இளைஞர்களிடம் பேசி சமாதான படுத்திய போலீசார் பேருந்தை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.