தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டிய இளைஞர் கீழே விழுந்து பலி!

 
death

பண்ருட்டி அருகே விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்க பெற்றோர் எதிர்ப்பு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துச் சென்ற கட்டிடத் தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Death

 கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் மகன் மாதவன் (24). கட்டிட தொழிலாளியான இவர், பல்வேறு ஊர்களுக்குச் சென்று வேலை பார்த்து வந்த நிலையில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்க பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார். அனுமதி மறுத்ததால் கோபமடைந்த மாதவன் பெற்றோரை மிரட்டுவதற்காக வீட்டிற்கு உள்ளே சென்று கதவை தாழிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது சுவற்றின் மேலிருந்து கயிற்றை மின்விசிறியில் கட்டிய நிலையில் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார். 

மாதவனின் கால் பகுதியில் கயிறு சுற்றிக் கொண்ட நிலையில், அப்படியே மேலிருந்து தலை குப்புற கீழே விழுந்தார். இதில் தலைப்பகுதி பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாதவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கட்டிட தொழிலாளி உயிரிழந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..