தமிழ்நாட்டில் பாஜக வாங்கிய வாக்குகள் பாமகவிற்கு சொந்தமானது தான் - செல்வப்பெருந்தகை!

 
1

நாட்டில் நடந்த லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாஜக கூட்டணிக்கு 292 இடங்களும், இந்தியா கூட்டணிக்கு 232 இடங்களும் கிடைத்துள்ளன. இதனால் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவோடு பாஜக மீண்டும் ஆட்சியமைக்க திட்டமிட்டு வருகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய எழுச்சியை கண்டுள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதோடு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 10 தொகுதிகளிலும் வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

பாஜகவை மக்கள் நிராகரித்துவிட்டனர். 2019ஆம் ஆண்டு 5.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்ற நரேந்திர மோடி, இப்போது 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி பேசும் போது காசி, வாரணாசி குறித்தே பேசி வந்தார். அப்படி பேசியும் வாரணாசி தொகுதியில் 4.5 லட்சம் மக்கள் நிராகரித்துள்ளனர். இந்தியா முழுவதும் இதே நிலை தான் உள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் 3 மணிக்கு மேல் தாமதப்படுத்தியதற்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை. அதேபோல் கருத்துக் கணிப்புகளை யாரும் வெளியிடாமல் கருத்து திணிப்புகள் வெளியாகின.

அதேபோல் தமிழ்நாட்டில் பாஜக வாங்கிய வாக்குகள் பாமகவிற்கு சொந்தமானது தான். இங்கு பாமகவிற்கு என்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. இங்கு 7 முதல் 8 சதவிகிதம் வாக்கு வங்கி வைத்துள்ளார்கள். பாமக பலமாக இருக்கும் பகுதியில் தான் பாஜக 2வது இடத்தை பிடித்துள்ளது. வன்னியர்கள் அதிகமிருக்கும் பகுதிகள் வாக்குகள் பெற்றுவிட்டு 2வது இடத்திற்கு வந்திருப்பதாக கூறுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதற்கு பாமக தான் காரணம்.

அதேபோல் நாம் தமிழர் கட்சிக்கு ஏமாந்த இளைஞர்கள் வாக்களிப்பது ஆபத்தான விஷயம். அவர் ஒரு பிரிவினைவாதி தான். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர் சீமான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.