தி.மு.க. போல காழ்ப்புணர்ச்சி காட்டாமல் திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற விஜய் அரசு உதவ வேண்டும் - நயினார் நாகேந்திரன்..!!

 
Nainar

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்  அறிக்கை:

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபமேற்ற வேண்டும் என்று, நீதிமன்றமே உத்தரவிட்ட பின், ஹிந்துக்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் தீபமேற்றுவதை, முந்தைய தி.மு.க., அரசு தடுத்த நிலையில், தீபமேற்றுவது பற்றிய த.வெ.க., அரசின் நிலைப்பாடு குறித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில், வரும், 22ம் தேதிக்குள் உயர் நீதிமன்றத்திடம் அரசு தெரிவிக்கும் முடிவே, த.வெ.க., அரசு அனைத்து மதங்களையும் மதிக்கும் அரசா அல்லது ஒரு மதத்தை மட்டும் சார்ந்த அரசா என்பதை, தமிழக மக்களிடம் தெளிவுப் படுத்தும்.

எனவே, 'இது அனைவருக்குமான அரசு' என்று முழங்கிய முதல்வர் விஜய், ஹிந்து மக்களின் உரிமையை காப்பதற்கு முனைய வேண்டும். போலி மதச்சார்பின்மை பேசி, ஆட்சியை இழந்த தி.மு.க.,வை போல அல்லாமல், மாற்று சக்தி என்பதை நிரூபிக்கும் வண்ணம், திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றுவதை உறுதி செய்து, தமிழர் பண்பாட்டை காக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

அவரின் மற்றொரு அறிக்கையில்,

'மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை, த.வெ.க., அரசு, முந்தைய தி.மு.க., அரசை போல, மொழி, இனம் மற்றும் அரசியல் சாயங்கள் பூசி, பிரிவினைவாதம் செய்யாமல், தமிழக மக்களுக்கு மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை முழுதுமாக செயல் படுத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.