மருத்துவரை கொடூரமாகத் தாக்கிய லாரி ஓட்டுநர்! போலீசாரின் அலட்சியத்தால் நடந்த விபரீதம்

 
லாரி ஓட்டுநர்

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த டாக்டர் மேகசியான் (வயது 33). இவர் சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி தாரணி, இவரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். பல்லாவரம் ரேடியல் சாலையில் பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி இருவரும் சென்ற கார் மீது லாரி மோதியது இதில் கார் சேதமான நிலையில் காரின் உரிமையாளர் லாரி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

A truck driver assaulted a doctor in chennai
 
காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வர தாமதமான நிலையில் லாரியின் டிரைவர் லாரியை எடுத்துக்கொண்டு தப்பித்து செல்ல முயற்சி செய்துள்ளார். இதை கண்ட தம்பதியினர் லாரியை மடக்கி காவல்துறையினர் வந்தவுடன் செல்லுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் லாரி டிரைவர் தம்பதியினரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் லாரி டிரைவர் ஒரு படி மேலே போய் தம்பதியினரை சரமாரியாக தாக்கி இருக்கிறார். இதை படம் பிடித்துக் கொண்டிருந்த செய்தியாளர் ஒருவரையும் தாக்கி செல்போனை பிடுங்கி உடைக்க முயன்றுள்ளார். இந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்னர் தாமதமாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த பல்லாவரம் போலீசார், அவர்களை விலக்கிவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினர் விசாரிக்கும் போது எந்த ஒரு அச்சமும் பதட்டமும் இன்றி சிரித்துக் கொண்டே லாரி ஓட்டுநர் காவல்துறையிடம் அலட்சியமாக பேசிக் கொண்டிருந்த காட்சி அங்கு கூடியிருந்த பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.