இணையத்தை கலக்கும் 'அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே' படத்தின் டிரெய்லர் வெளியானது..! ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
'அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்' மற்றும் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ், 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' படத்தையும் இயக்கியுள்ளனர். இந்தப் படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமே, அயர்ன் மேன் பாத்திரத்தின் மூலம் மார்வெல் உலகின் முகமாக விளங்கி, 'எண்ட்கேம்' படத்தில் உயிரிழந்ததாக காட்டப்பட்ட ராபர்ட் டவுனி ஜூனியர் மீண்டும் மார்வெல் உலகிற்குள் நுழைந்திருப்பதுதான். ஆனால், இம்முறை அவர் ஹீரோவாக அல்லாமல், மல்டிவெர்ஸ் உலகையே அழிக்கத் துடிக்கும் மிகக் கொடூரமான வில்லனான 'டாக்டர் டூம்' பாத்திரத்தில் களம் இறங்கியுள்ளார்.
இந்த திரைப்படம், வரும் டிசம்பர் 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரில் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள், நவீன கிராபிக்ஸ் மற்றும் பரபரப்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால், சமூக வலைத்தளங்களில் டிரெய்லர் வேகமாக வைரலாகி வருகிறது. மார்வெல் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஹல்க், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், ஸ்பைடர் மேன் உள்ளிட்ட முக்கிய சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் டிரெய்லரில் இடம்பெறாதது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெய்லரில் தோர் மற்றும் கேப்டன் அமெரிக்கா மீண்டும் இணையும் காட்சிகள் ஈர்க்கின்றன.
இதுதவிர, 'எக்ஸ்-மென்' கதாபாத்திரங்களான ப்ரொஃபெசர் எக்ஸ், மேக்னடோ, சைக்ளோப்ஸ் மற்றும் கேம்பிட் ஆகியோரும் அவெஞ்சர்ஸ் அணியுடன் இணைகிறார்கள். இவர்களுடன் அண்மையில் அறிமுகமான 'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' மற்றும் 'தண்டர்போல்ட்ஸ்' குழுவினரும் இணைந்து மல்டிவெர்ஸைக் காக்கப் போராடுகின்றனர்.

