“ஒருநாள் எனக்கு ‘RIP’ என வைப்பார்கள்..” மற்றொரு யூடியூப் பிரபலத்திற்கு நேர்ந்த சோகம்
பவானி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (20), சேண்டி வியூஸ் என்ற பெயரில் யூட்டூப் சேனல் வைத்து அதில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைப்ர்களை கொண்டுள்ளார். இவர் தனது கேடிஎம் டியூக் பைக்கில் டிராவல் செய்து அதனை வீடியோவாக பதிவேற்றி வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய நெருங்கிய நண்பரான சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த கவின் (19) உடன் சேர்ந்து தன்னுடைய KTM Duke இருசக்கர வாகனத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பவானியில் இருந்து புறப்பட்டு கோவாவிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். இதுகுறித்து தனது youtube மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து அங்கு சுற்றுலா முடித்துவிட்டு இருவரும் கோவாவில் இருந்து மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை சந்தோஷ்குமார் ஓட்டி வந்துள்ளார். இன்று மாலை ஈரோடு மாவட்டம் பவானி அருகே தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தபோது பவானி அருகே சன்னியாசிபட்டி பிரிவு எனும் இடத்தில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது இவர்கள் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் சன்னியாசி பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சதீஷ்குமார் (42) தலை மற்றும் கழுத்து பகுதியில் படு காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சதீஷ்குமாருடன் வந்த சந்தோஷ் (36) என்பர் தூக்கி வீசப்பட்டு கை கால் என உடலில் பல்வேறு இடங்களில் படுகாயம் அடைந்தார். மேலும் யூட்டூப்பர் சந்தோஷ் குமார் மற்றும் கவின் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கவின் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பிய நிலையில், பைக்கை ஓட்டி வந்த சந்தோஷ் குமாருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது, இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விபத்தில் காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சதீஷ்குமாரின் உடல் பவானி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

காயம் அடைந்த மூவரும் பவானியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தன்னுடைய நண்பனுடன் கோவாவிற்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு எங்கும் விபத்தில் சிக்காமல் வந்த யூட்டூப்பர் சந்தோஷ்குமார் சொந்த ஊருக்கு அருகில் வரும்போது விபத்து ஏற்படுத்தி ஒருவர் உயிரிழப்பிற்கு காரணமானதோடு விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கடந்த 2023 ஆம் ஆண்டு தனது youtube பக்கத்தில் ஒரு நாள் என்னுடைய படத்தை வைத்து பொதுமக்கள் Rip என வைப்பார்கள் என பதிவேற்றியுள்ளார். மேலும் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போதெல்லாம் கூட எந்த ஒரு விபத்தும் ஏற்படவில்லை ஆனால் வேகம் குறைவாக சென்றபோது விபத்தில் சிக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற யூடியூப் இளைஞர்கள் தங்களது அதிவேக இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று விபத்து ஏற்படுத்தி எதிரே வருபவர்களை உயிரிழப்பு ஏற்படுத்துவது அல்லது இவர்கள் உயிரிழப்பது, படுகாயம் அடைவது உள்ளிட்ட ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய செயல் தொடர்ந்து அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது .

