கருப்பு திரைப்படத்தின் டைட்டில் கார்டில் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி கார்டு போட்ட படக்குழு..!
கருப்பு திரைப்படத்தின் டைட்டில் கார்டில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
நடிகர் சூர்யா ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கருப்பு திரைப்படம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 'கருப்பு' திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
நேற்று காலை 9 மணிக்கு திரையிடப்பட இருந்த சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவிர்க்க முடியாத காரணங்களால் 'கருப்பு' திரைப்படத்தின் காலை 9 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு அனைவரிடமும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சூர்யாவின் ‘கருப்பு' திரைப்படம் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு இடையேயான நிதிப் பிரச்னையால் வெளியீட்டைச் சந்திக்காமல் இருக்கிறது. நடிகர் சூர்யாவும் இப்பிரச்னையைத் தீர்க்க பெரிய தொகையைச் செலுத்த முன் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், 'கருப்பு' திரைப்படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில், “அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இது நடந்திருக்கக் கூடாது. திரைப்படம் பார்ப்பதே நம் துன்பங்களை மறக்கத்தான். ஆனால், படம் பார்க்க வருவதே துன்பமாக அமைந்துவிடக்கூடாது. நானும் இதை எதிர்பார்க்கவில்லை. கருப்பன் வரான் வழி மறிக்காதே என்றால் நிறைய பேர் மறித்துக்கொண்டிருக்கிறார்கள். கடவுள் நம்முடன் இருக்கிறார். படம் இன்று மாலை வெளியாகும் என நம்புகிறேன். உங்களுக்கெல்லாம் கண்டிப்பாக பிடிக்கும்." என கண்ணீருடன் கூறியது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிரச்சனைகளை கடந்து இறுதியாக இன்று வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. தொடர்ந்து இன்று வெளியான கருப்பு படத்தில் தொடக்கத்தில் முதல்வர் விஜய்க்கு சிறப்பு நன்றி (Special Thanks Card) கார்டு போடப்பட்டுள்ளது. திரைப்படத்தின் ஆரம்பத்தில் "Special Thanks" பகுதியில் விஜய்க்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக, "Chief Minister Vijay" என குறிப்பிடப்பட்டு, ரசிகர்கள் அமைப்பின் சார்பில் வாழ்த்து செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
#Karuppu Special Thanks card to our nanbar #CMVijay ♥️💥 pic.twitter.com/TArG0t1dVc
— Karthick (@OSFCKarthick) May 15, 2026

