7,535 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

 
’எண்ணும் எழுத்தும்’ பயிற்சியை உடனடியாக நிறுத்திடுக.. - ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்..

தமிழகத்தில் நடப்பாண்டில் 7,355 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தனது ஆண்டு நாட்காட்டியில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என அனைத்து விதமான அரசுப்பள்ளிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு சட்டக்கல்லூரி என தமிழ்நாடு அரசு கல்வி நிலையங்களில் ஆசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்கள், வட்டார கல்வி அதிகாரிகள் ஆகியோரை பொதுத்தேர்வு முறையில் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்கிறது  ஆசிரியர் தேர்வு வாரியம். ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்படும் பணியிடங்களுக்கான நாட்காட்டியை அவ்வப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் பதிவேற்றம் செய்யும். 

அதன்படி நடப்பாண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நாட்காட்டி இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இணை பேராசிரியர்கள், உதவி நுாலகர்கள், உதவி இயக்குனர் (உடற்கல்வி) உள்ளிட்ட 232 பணியிடங்களுக்கு ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெறும் என்றும், சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள இணை சட்ட பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட 132 பணியிடங்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள  உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட 4000 பணியிடங்களுக்கு ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர்

1,915 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு நவம்பர் மாதம் தேர்வு நடைபெறும் என்றும்,  1,205 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் மாதத்திலும் அறிவிப்பு வெளியிடப்பட்டு, டிசம்பர் மாதம் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 51 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு நவம்பர் 2025-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மார்ச் 2026ல் தீர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 180 மாணவர்களை தேர்வு செய்வதற்கான முதலமைச்சர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்(CMRF) ஜூன் மாதம் வெளியிடப்பட்டு செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு  பல்கலைக்கழகங்களிலிருந்து வழங்கப்படும் கோரிக்கை மற்றும் தேவையின் அடிப்படையில் அறிவிப்பு வெளியிடப்படுமென ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.