தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை; மீண்டும் எந்த பிரச்சனையும் கிளப்பிடாதீங்க - உதயநிதி ஸ்டாலின்..!!
தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே சில இடங்களில் வார்த்தைகள் கேட்கவில்லை. இதனை பிரச்சனை ஆக்க வேண்டாம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு நிறைவுச் சான்றிதழ் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவிலேயே இந்த அளவுக்கு ஊதியத்தை போல ஊக்கத்தொகை கொடுப்பது தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தில் மட்டும்தான் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது அரசு அதிகரிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடியதால், உதயநிதி ஸ்டாலின் மீண்டும் அவர்களை சரியாக பாடச்சொன்னார். இதனையடுத்து 2வது முறையாக மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ தமிழ்நாடு அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட 30 பேரில் 19 பேர் நிறைவு செய்து இன்று சான்றிதழ் பெற்றுள்ளனர். பாரதிதாசன் மேலாண்மை கல்லூரியுடன் இணைந்து ஆண்டுக்கு 6.5 கோடியில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அடுத்த 2 ஆண்டுக்கு இப்பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 30 நாள் வகுப்பறை பயிற்சி திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் வழங்கப்பட்டது. இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.65 ஆயிரம், இதர செலவினங்களுக்காக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடப்படவில்லை , அவர்கள் பாடும்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக , மைக் சரியாக வேலை செய்யவில்லை. எனவே 2..3 இடத்தில் அவர்களது குரல் கேக்கவில்லை. எனவே மீண்டும் சரியாக பாட வைத்மோம் , நிகழ்ச்சியின் நிறைவில் தேசிய கீதமும் பாடப்பட்டது. தேவையில்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக மீண்டும் எந்த பிரச்சனையும் கிளப்பிவிடாதீர்கள்” என்று தெரிவித்தார்.


