லாட்ஜில் வைத்து பெட்ரோல் குண்டு தயாரித்து சீமான் வீட்டிற்கு சென்ற தபெதிகவினர்! பரபரப்பு பின்னணி

 
ச்

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற போது கையும் களவுமாக சிக்கிய த.பெ.தி.க கட்சியினர் 10 பேரை போலீசார் கைது செய்து,அவர்களிடமிருந்து 5 பெட்ரோல் குண்டு மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப நாட்களாக பெரியார் குறித்து பேசி வரும் கருத்துகள் சர்ச்சையாகி பெரியாரிய இயக்கங்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி வருகிறது. குறிப்பாக ஏற்கனவே நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் த.பெ.தி.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டு நா.த.க நிர்வாகியின் கார் கண்ணாடியை அடித்து உடைத்தனர். இந்த நிலையில் தொடர்ச்சியாக சீமான் பெரியாரைப் பற்றி பேசி வருவதால் அவருக்கு எதிராக ஏதேனும் சதி செயல் தீட்டப்படுகிறதா என போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சிலர் ராயப்பேட்டையில் உள்ள சீனிவாசா பெருமாள் சன்னதி முதல் தெருவில் அமைந்துள்ள லாட்ஜில் ஒன்று கூடி திட்டம் தீட்டி வருவதாக போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. அதன் பேரில்  தனிப்படை போலீசார் ராயப்பேட்டையில் உள்ள லாட்ஜிற்கு சென்றபோது த.பெ.தி.கவினர் மூன்று இருசக்கர வாகனத்தில் ஆறு பேர் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை நோக்கி சென்றனர். இதனை அறிந்த போலீசார் அவர்களை இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றபோது போலீஸ் வருவதை அறிந்து அவர்கள் வேகமாக சென்ற போது இசிஆர் பகுதியில் ஒரு இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்தனர். மற்ற இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து பிடிபட்ட அந்த இரண்டு நபர்களையும் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது,  தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளரும் சி கேட்டகிரியை சேர்ந்த குமரன் என்கிற டிங்கர் குமரன் என்பதும், மற்றொருவர் தபெ தி க விருகம்பாக்கம் துணைச் செயலாளர் சுரேஷ் என்பதும் தெரிய வந்தது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தொடர்ச்சியாக பெரியார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசி வரும் சீமானின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச சென்றதும், மீதமுள்ள நபர்கள்  ராயப்பேட்டையில் உள்ள லாட்ஜில் பதுங்கி இருப்பதாக தகவல் அளித்துள்ளார் தகவலின் பேரில் போலீசார் ராயப்பேட்டையில் உள்ள லாட்ஜில் பதுங்கி இருந்த சந்திரன், கோபி, பிரசாந்த், சக்திவேல், ரஞ்சித்,மணிகண்டன், தீபக், ராஜா ஆகிய எட்டு நபர்கள் உட்பட மொத்தம் இவ்வழக்கில் பத்து நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சீமான் தொடர்ச்சியாக பெரியார் குறித்து இழிவாக பேசி வருவதாகவும் அவரை ஏன் இன்னும் காவல்துறை கைது செய்யவில்லை. அதனால் தான் சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இதனால் ராயப்பேட்டையில் உள்ள லாட்ஜில் இரண்டு அறை எடுத்து பெட்ரோல் மற்றும் குவாட்டர் பாட்டில் வாங்கி வந்து ஏழு பெட்ரோல் குண்டுகளை தயார் செய்ததாகவும், அதில் இரண்டு பெட்ரோல் குண்டுகளை எடுத்துக்கொண்டு சீமான் வீட்டிற்கு சென்ற போது தான் போலீசார் தங்களை கண்டறிந்து துரத்தி வருவது தெரிய வந்ததையடுத்து இரண்டு பெட்ரோல் குண்டுகளை சாலையில் தூக்கி வீசியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். அறையில் மீதமுள்ள 5 பெட்ரோல் குண்டுகள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய 5 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள குமரன் மீது ஏற்கனவே துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட நபர்களை ராயப்பேட்டை போலீசார் லாட்ஜில் வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கு உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.