"ஸ்கூலுக்கு தினமும் நடந்து போக முடியல சார்.. ரொம்ப கஷ்டமா இருக்கு! பஸ் வசதி செஞ்சு கொடுங்க சார்"- அமைச்சர் காரை மறித்த மாணவன்

 
ஃப்ச்க் ஃப்ச்க்

பெரம்பலூர் அருகே காரில் சென்ற அமைச்சரை  கையை காட்டி மறித்து பேருந்து சேவை கேட்ட  பள்ளி மாணவனால் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர்  சிவசங்கர்,குன்னம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு கிராமங்களில் புதிய அரசு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிடவும், நிறைவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் பல்வேறு கிராமங்களுக்கு  சுற்றுபயணம் செய்து வருகிறார். இந்நிலையில் குன்னம் அருகே உள்ள எழுமூர் கிராமத்திற்கு சென்ற அமைச்சர் சா.சி. சிவசங்கரின்  வாகனத்தை, பள்ளி முடிந்துவீடு திரும்பி கொண்டிருந்த சந்துரு என்ற 14 வயது மாணவன்  ஒருவன் அமைச்சரை பார்த்து கையை காட்டியுள்ளான்... இதை கண்ட அமைச்சர் தனது வாகனத்தை நிறுத்த சொல்லி கீழே இறங்கி கையசைத்த மாணவனை அருகில் அழைத்து, எதற்காக கையசைத்தாய்? என்று கேட்டதும், தனது சொந்த ஊரான ஆய்குடிக்கு செல்வதற்கு பேருந்து சேவை இல்லை. அதை ஏற்பாடு செய்துகொடுங்கள் ஸ்கூலுக்கு தினமும் நடந்து போக முடியல சார்.. ரொம்ப கஷ்டமா இருக்கு என அந்த மாணவர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளான். 

இதனையடுத்து உடன் வந்த அரசுப் போக்குவரத்து கழக கிளை அலுவலரை அழைத்து அந்த மாணவன் கோரிய வழித்தடத்தில் பேருந்து இயக்க ஏற்பாடு செய்யுங்கள் என அமைச்சர் உத்தரவிட்டார். மேலும் மாணவர்களை பார்த்து நன்குபடிக்கும் படி கூறிய அமைச்சர் நாளை முதல் உங்கள் கிராமத்திற்கு அரசுப்பேருந்து வரும் என்று உறுதிபடகூறியதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர் இச்சம்பவம் உடன் இருந்தவர்களை நெகிழ்ச்சியுற செய்தது.