தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது- தென்னிந்திய நடிகர் சங்கம்
வருமானப் பகிர்வு அடிப்படையில் படத்தயாரிப்பை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள மே 2ஆம் தேதி வேலை நிறுத்தம் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது என தென்னிந்திய நடிகர் சங்கம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பார்வையில் காணும் தங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றோம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றம் சுமத்தி அதையே காரணமாகவும் முன்னிறுத்தி மே 2, 2026 தேதியன்று வேலை நிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்து உள்ளீர்கள். இது எங்களுக்கு பேரதிர்ச்சியையும் பெரும் வேதனையும் அளிக்கிறது. தொடர்ந்து தயாரிப்பாளர்களின் பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண அமைப்பு ரீதியாக தாங்கள் வேண்டுகோள் விடுத்த போதெல்லாம் சந்திப்புகள் நிகழ்த்தியும், பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் உறுதுணையாக தென்னிந்திய நடிகர் சங்கம் இருந்து வரும் நிலையில், தன்னிச்சையாக இந்த வேலை நிறுத்த அறிவிப்பை தாங்கள் வெளியிட்டது வருத்தத்திற்குரியது, திரைத்துறை சார்ந்த நடிகர்கள், கலைஞர்கள் அனைவரது வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வேலை நிறுத்தம் என்னும் அணுகுமுறையை என்றுமே தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரித்தது இல்லை, இனியும் ஆதரிக்காது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், தாங்கள் கடிதத்தில் குறிப்பிட்டதற்கு எதிர்மாறாக, நடிகர்கள் வருமான பகிர்வு முறையில் பணியாற்றுவது தொடர்பாக தங்கள் தரப்பிலிருந்து இதுவரை எங்களுக்கு எந்தவித கடிதமோ, மின்னஞ்சலோ அனுப்பப்படவில்லை என்பதையும், அது தொடர்பாக எந்தவித பேச்சு வார்த்தையும் நிகழ்த்த அழைக்கவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அத்துடன் சங்கம் தென்னிந்திய நடிகர் ஒருபோதும் தனது உறுப்பினர்களை வேலை நிறுத்தம் செய்யுமாறு அறிவுறுத்த எங்கள் சட்ட விதிகளில் இடமில்லை என்பதையும் இதன் வாயிலாக பதிவு செய்கிறோம். கடந்த சுமார் ஓர் ஆண்டுக்கு முன்னரே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னெடுப்பினால், தமிழ் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் இரு தரப்பினருக்கும் இடையே இணக்கமான சூழலை உருவாக்கும் அமைப்புகள் ரீதியிலான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவோலையை நம் இருதரப்பின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் குழுவின் கலந்தாலோசனைக்குப் பிறகு இறுதி செய்து, அதை தங்களிடம் நாங்கள் ஒப்படைத்ததையும், அது தொடர்பாக தங்கள் தரப்பிலிருந்து இது நாள் வரை எந்த நகர்வும் இல்லை என்பதையும் நினைவுபடுத்துகிறோம். இதுவரை எங்கள் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட நீண்ட புகார் பட்டியலில் உள்ள எந்த புகாருக்கும் தங்கள் தரப்பிலிருந்து எவ்வித தீர்வும் வழங்கப்படாமல் முடிவின்றி நீண்டு வருவதையும் தாங்கள் மறுக்க இயலாது, ஆகவே தங்கள் உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தையும் முதலீட்டையும் கூட பிரதானமாக பாதிக்கக்கூடிய இந்த தன்னிச்சையான வேலை நிறுத்த அறிவிப்பை திரும்பப் பெறுமாரும். முன்னரே இரு அமைப்புகளும் ஒப்புக்கொண்டபடி 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள், மே 4-ஆம் தேதி வெளியான பிறகு, பரஸ்பரம் பொருத்தமான ஒரு தேதியில் இரு அமைப்பின் பிரதிநிதிகளும் சந்தித்து அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசனை செய்து தீர்மானிக்கலாம் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதனிடையே, கடந்த இரு தினங்களாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெகு வேகமாக பரவி வரும் தங்கள் அமைப்பின் சமீபத்திய பொதுக்குழு தீர்மானங்களின் நகலும், பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பான செய்திகளும், தென்னிந்திய நடிகர் சங்கத்தையும், அதன் உறுப்பினர்களையும் மட்டுமே திரைத்துறையின் சிக்கல்கள் அனைத்திற்கும் முழுமையான காரணமாக வடிவமைத்து, சித்தரித்து வருவது பெரும் வேதனைக்குரியது, அது தவறான தகவல் எனில் உடனடியாக அதை மறுத்து தங்கள் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடுமாறும், அந்தத் தகவல்கள் தங்கள் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டிருந்தால் உடனடியாக அத்தகு உண்மைக்கு புறம்பான அறிக்கையை, நமது சந்திப்பிற்கு முன்னர் திரும்பப் பெறுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இணைந்து செயல்பட்டு தமிழ் திரைத்துறையினர் அனைவரின் நல்ல நிகழ் காலத்திற்காகவும், வளமான வருங்காலத்திற்காகவும் எங்கள் ஒத்துழைப்பை நல்க என்றென்றும் ஆயத்தமாக உள்ளோம். அதையே துறை சார்ந்த பிறரிடமும் எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

