"வேலியே பயிரை மேய்ந்த கதை" ... ஆசிரியருக்கு 47 வருடம் கடுங்காவல் தண்டனை..!

 
1

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக கடந்த 2015ம் ஆண்டு முருகன் (62) பணிபுரிந்தார். இவர் 4 மற்றும் 5ம் வகுப்பு படித்த ஆறு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் பாட்டி சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதனை விசாரித்த போலீசார், முருகன் மீது போக்சோ, தீண்டாமை ஒழிப்புச் சட்டம் உள்பட 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ் குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 47 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ₹69 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட 6 சிறுமிகளில் முதல் சிறுமிக்கு ₹7 லட்சம், மற்றொரு சிறுமிக்கு ₹6 லட்சம், மற்ற நான்கு சிறுமிகளுக்கு தலா ₹4 லட்சம் என மொத்தமாக ₹29 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.