மீண்டும் சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை..!
ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 10ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அதானி – செபி தலைவரை மையப்படுத்தி குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதனால் நேற்று திங்கள்கிழமை இந்திய பங்குச் சந்தை கூடியதும் அதானி குழும பங்குகள் சரிவைச் சந்தித்தன. அவற்றுடன் இந்திய பங்குச் சந்தையும் நேற்று காலைச் சரிவுடன் தொடங்கியது. எனினும், காலை 10 மணி முதல் ஏற்றம் பெற தொடங்கியது. நாளின் இறுதியில் சென்செக்ஸ் 57 புள்ளிகள் மட்டுமே சரிவைச் சந்தித்தது. அதேநேரம், நிப்டி 20 புள்ளிகளை இழந்தது.
அதேபோல் அதானி குழும பங்குகள் பங்குச் சந்தை தொடங்கியதும் 7 சதவீதம் வரை சரிவுடன் இருந்த நிலையில், நாள் இறுதியில் மெல்ல மீண்டது. எனினும், நேற்றைய வர்த்தக நாள் முடிவில் 2.43 பில்லியன் டாலர் அதானி குழும நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டது. இந்திய மதிப்பில் இது 20,000 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை அதானி குழுமத்தின் சில பங்குகள் சற்றே உயர்ந்தன. அதானி குழுமத்தின் பத்து நிறுவனங்களில் ஒன்பது நிறுவனங்களின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தின் போதும் மீண்டன.
நண்பகல் நிலவரப்படி, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் பங்குகள் 6 சதவீதமும், அதானி டோட்டல் கேஸ் 4 சதவீதமும் உயர்ந்தது, அதானி கிரீன் எனர்ஜி 2.55 சதவீதமும் அதிகரித்தது. அதேபோல், அதானி வில்மர் பங்குகள் 2.15 சதவீதம், அதானி பவர் 1.74 சதவீதம், அதானி போர்ட்ஸ் 1 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து வர்த்தகம் ஆகின. எனினும், அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் இன்று காலை முதலே சரிவைச் சந்தித்தது.
இதற்கிடையே, இந்திய பங்குச் சந்தை இன்று சரிவுடன் காணப்பட்டது. இன்றைய நாளின் இறுதியில் சென்செக்ஸ் 692 புள்ளிகளை இழந்து 78,956 புள்ளிகளுடன் உள்ளது. அதே நேரம், நிப்டி 208 புள்ளிகளை இழந்து 24,139 புள்ளிகளுடன் உள்ளது.