மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகன்
நெல்லையில் குடும்பத்த தகராறில் மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டார்.

நெல்லை நெல்லை மாவட்டம் கொத்தமல்லி நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா அவரது மனைவி வள்ளியம்மாள் வயது 45. இவரது மகள் துர்கா. இவருக்கும் மேலச்செவல் பகுதியைச் சேர்ந்த ஆறுமுக நைனார் வயது 30 என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் ஆறுமுக நயினார் அவரது மனைவி துர்கா இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு ஆறுமுக நைனார் அதிக மதுபோதையில் வந்து மனைவி துர்காவுடன் சண்டையிட்டு அவரது தாய் வீடான நரசிங்கநல்லூருக்கு கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து துர்காவின் தாய் வள்ளியம்மாள் மருமகன் ஆறுமுக நயினாரை தொலைபேசியில் அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆத்திரத்தில் இன்று காலையில் ஆறுமுக நயினார் தனது மாமியாரான வள்ளியம்மாளை சந்திக்க நரசிங்கநல்லூருக்கு வந்திருக்கிறார். இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது இதனைத் தொடர்ந்து ஆறுமுக நயினார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வள்ளியம்மாளை வெட்டினார். அதை தடுக்க வந்த துர்காவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. சம்பவ இடத்திலேயே வள்ளியம்மாள் பரிதாபமாக இறந்தார். துர்காவிற்கு பெரிய காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.தகவல் அறிந்த சுத்தமல்லி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி இந்த செயலில் ஈடுபட்ட ஆறுமுக நயினாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

