பெற்றோர்களின் தியாகம் வீணாகிவிட்டது..! - நீட் விவகாரத்தில் கொந்தளித்த செல்வப்பெருந்தகை!
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த மே 3-ம் தேதியன்று நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு, வினாத்தாள் கசிந்ததால் ரத்து என்று மத்திய அரசின் தேர்வு முகமை (National Testing Agency) அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசுக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பல லட்சம் மாணவர்கள் தங்கள் மருத்துவர் ஆகும் கனவுகளை, நினைவாக்க இரவும் பகலும் கடுமையாக உழைத்தனர். பெற்றோர்கள் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக எண்ணற்ற தியாகங்களை செய்தனர். ஆனால், நிர்வாக அலட்சியம், முறைகேடுகள் மற்றும் கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையிழப்பு மட்டுமே பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்தது.
இந்த நிலைமை ஒரு சாதாரண தவறு அல்ல. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடப்பட்ட மிகப்பெரிய அநீதி. நாட்டின் கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்களை உடனடியாக கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு எழுதுவது கட்டாயம் என்று நீட் தேர்வு கொண்டு வந்ததிலிருந்து முறைகேடுகள் நடைபெறுவது தொடர்கதையாகிவிட்டது. மாணவர்களின் மனஅழுத்தம், பெற்றோரின் வேதனை மற்றும் அவர்களின் கடின உழைப்பை மதிக்கும் வகையில், மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நீட் தேர்வை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

