இன்று மாலை தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் விதிகள் என்னென்ன?

 
இன்று மாலை தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் விதிகள்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதியை அறிவித்த உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். 

election commision

இன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே முதல் வாரம் நடைபெற வாய்ப்புள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மூன்று முதல் நான்கு கட்டமாகவும், அசாம் மாநிலத்தில் இரண்டு முதல் மூன்று கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.


தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் விதிகள்:


* தேர்தல் முடியும் வரை எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது.

* பிரசாரத்தின் போது கட்சிகளுடைய செயல்பாடுகளை தவிர்த்து தனிநபர் விமர்சனம் செய்ய கூடாது.

* தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் அரசு பணியாளர்கள், பொதுத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் கூடாது.

*அரசு விழாக்கள் நடத்த கூடாது,  அமைச்சர்கள் என்ற முறையில் எந்தவிதத்திலும் பரப்புரை மேற்கொள்ள கூடாது. அமைச்சர்கள் வேட்பாளராகவோ, வாக்குச்சாவடி முகவராகவோ கலந்து கொள்ளலாம்.

* கட்சி பாகுபாடின்றி பொது மைதானங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்.

* பொது இடங்களில் கட்சி பேனர்கள் அகற்றப்படும்.

* மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியாளரிடம் உரிய அனுமதி வாங்கிய பின்னரே பொதுக்கூட்டம் நடத்த முடியும்.