தமிழகத்தில் சட்டவிரோதிகளின் ஆட்சி.. வேலியே பயிரை மேய்வதற்கு சமம் - ஓபிஎஸ்..

 
ops

தமிழகத்தில் சட்ட விரோதிகளின் ஆட்சிதான் நடைபெறுவதாக  ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளும் திமுக-வைச் சேர்ந்தவர்களே திருச்சியில் உள்ள காவல் நிலையத்திற்குள் சென்று ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டதையும், இந்தத் தாக்குதலில் அங்குள்ள பெண் காவலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதையும் பார்க்கும்போது, 2007ம் ஆண்டு மதுரையில் பத்திரிக்கை அலுவலகத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவமும், அதில் அப்பாவி பத்திரிகையாளர் உயிரிழந்ததும்தான் மக்களின் நினைவிற்கு வருகிறது.

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கேஎன் நேரு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை திறந்து வைத்தார். அவற்றில் ராஜா காலனி பகுதியில் அமைந்துள்ள டென்னிஸ் மைதானத்தையும் திறந்து வைத்ததும் ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அழைக்கப் படவில்லை என்றும், அவரது பெயர் கல்வெட்டில் இடம் பெறவில்லை என்றும் தெரிவித்து, மாநிலங்களவை உறுப்பினரின் ஆதரவாளர்களுக்கும், அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறையில் முடிந்துள்ளது.

திருச்சி சிவா

இந்த வன்முறையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் வீட்டில் இருந்த நாற்காலிகள், இருசக்கர வாகனம், கார் கண்ணாடி ஆகியவை சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து திருச்சியில் உள்ள நீதிமன்ற காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மாநிலங்களவை உறுப்பினரின் ஆதரவாளர்கள் மீது அமைச்சரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், பதிலுக்கு மாநிலங்களவை உறுப்பினரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இந்தத் தாக்குதலில் பெண் காவலர் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வன்முறையில் காவல் துறையில் உள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், காவல் நிலையத்தை கலவர பூமியாக ஆளும் கட்சியினர் மாற்றியுள்ளனர். வன்முறையும், திமுக-வும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது; திமுக ஆட்சி என்றால் அங்கே சட்டம்-ஒழுங்கு சீரழியும்; திமுக ஆட்சி என்றால் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இருக்காது என்பதற்கெல்லாம் எடுத்துக்காட்டாக காவல் நிலையத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் விளங்குகிறது. அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினரும் மோதிக் கொள்வது என்பதும், ஆளும் கட்சியினரே வன்முறையில் ஈடுபடுவது என்பதும் வேலியே பயிரை மேய்வதற்குச் சமம்.

தமிழகத்தில் சட்டவிரோதிகளின் ஆட்சி.. வேலியே பயிரை மேய்வதற்கு சமம் - ஓபிஎஸ்..

இதிலிருந்து தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை, மாறாக சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கும் திமுக அரசிற்கு அஇஅதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அளவுக்கு வன்முறை நடைபெற்றும், காவல் துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் வாய் திறக்காமல் இருப்பதைப் பார்க்கும்போது அவரது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லையோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்திருக்கிறது.

காவல் துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் வன்முறையில் ஈடுபட்ட அனைவர் மீதும், அதற்கு காரணமானவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே நிலவுகிறது. "குடிபுறங் காத்துஓம்பிக் குற்றம் கடிதல் - வடுவன்று வேந்தன் தொழில்" என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, தவறிழைத்தவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுத்து உரிய தண்டனையை பெற்றுத் தரவும், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் இனி வருங்காலங்களில் நிகழாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்துகிறேன்..