பெயர்ந்து விழும் அரசுப்பள்ளி மேற்கூரை.. மாணவர்கள் உயிரோடு விளையாடும் பள்ளிக்கல்வித்துறை - டிடிவி தினகரன் கண்டனம்..

 
ttv

செங்கல்பட்டு அருகே அரசுப்பள்ளி வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.  மாணவ, மாணவியர்களின் உயிரோடு விளையாடும் பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  

 இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போதே, கட்டடத்தின் மேற்கூரையின் பூச்சு பெயர்ந்து விழுந்த விபத்தில் 5 மாணவிகள் உட்பட 6 பேர் காயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. 

anbil magesh

கடந்த மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட பின்னரும், பள்ளிக்கல்வித்துறை காட்டும் அலட்சியப் போக்கால் அடுத்தடுத்த விபத்துக்கள் ஏற்பட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

சிறுதாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மிகவும் பழமையான, பழுதடையும் நிலையில் உள்ள கட்டடங்களில் வகுப்பறைகளை நடத்தக் கூடாது என பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததே இந்த விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, மாணவ, மாணவர்களின் பாதுகாப்பில் இனியும் அலட்சியம் காட்டாமல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உரிய ஆய்வை மேற்கொண்டு பழுதடையும் நிலையில் உள்ள கட்டடங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பதோடு, தரமற்ற நிலையில் உள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.”என்று குறிப்பிட்டுள்ளார்.