போலீசாரின் கையை வெட்டிய வழிப்பறி கொள்ளையன்! என்கவுண்டரின் பரபரப்பு பின்னணி

 
அ

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் தாதாக்கள், பிரபல ரவுடிகளை ‘என்கவுண்ட்டர்' மூலம் போலீசார் சுட்டு வீழ்த்தும் சம்பவம் கடந்த சில நாட்களாக அரங்கேறி வருகிறது. குறிப்பாக சென்னையில் ஒரு மணி நேரத்தில் 6 பெண்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இரானி கொள்ளையன் ஜாபர் குலாம் உசேன், மதுரையில் ரவுடி சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோர் போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அதுபோல் கடலூரில் கொள்ளை கும்பல் தலைவன் என்கவுண்ட்டரில் போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 

கடலூர் அருகே உள்ள எம்.புதூரை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 45), விவசாயி. இவர் நேற்று அதிகாலை அதே பகுதியில் உள்ள தனது விளை நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கும்பல் காளிமுத்துவை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காளிமுத்துவின் தலையில் வெட்டிவிட்டு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 100 ரூபாயை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த காளிமுத்துவை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து காளிமுத்து, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்

விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களில் 5 பேர் செம்மண்டலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் செம்மண்டலம் பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறம் பதுங்கி இருந்த 5 பேரை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், புதுச்சேரி மாநிலம் திலாஸ்பேட்டை அருகே உள்ள வீமன்நகரை சேர்ந்த கோபி மகன் விஜய் என்கிற மொட்டை விஜய் (19) என்பவருடன் சேர்ந்து புதுச்சத்திரம் பகுதியில் 2 லாரி டிரைவர்களையும், எம்.புதூர் பகுதியில் விவசாயி காளிமுத்துவையும் அரிவாளால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்ததும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த கொள்ளை கும்பலுக்கு விஜய் தலைவனாக செயல்பட்டதும், அவர் எம்.புதூர் பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் பதுங்கி இருப்பதும் தெரிந்தது.

உடனே திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் மதியம் 2 மணி அளவில் எம்.புதூரில் காசநோய் மருத்துவமனை அருகில் உள்ள முந்திரி தோப்பு பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள முட்புதரில் பதுங்கி இருந்த விஜய், கண்ணிமைக்கும் நேரத்தில் போலீஸ்காரர் கோபியின் இடது கையில் அரிவாளால் வெட்டினார். அப்போது இன்ஸ்பெக்டர் சந்திரன், அரிவாளை ஒப்படைத்துவிட்டு சரண் அடையுமாறு விஜயிடம் கூறினார். இருப்பினும் அதை கண்டுகொள்ளாத விஜய், அங்கிருந்த போலீஸ்காரர் கணபதியின் வலது கையிலும் அரிவாளால் வெட்டினார். இதனால் இன்ஸ்பெக்டர் சந்திரன், தன்னை காத்துக் கொள்வதற்காகவும் சக போலீசாரை காப்பதற்காகவும் விஜயை நோக்கி துப்பாக்கியால் 3 முறை என்கவுண்ட்டர் செய்தார். இதில் ஒரு குண்டு விஜயின் இடுப்பு பகுதியிலும், 2 குண்டுகள் அவரது மார்பிலும் துளைத்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த விஜய், மற்றும் காயமடைந்த போலீஸ்காரர்கள் 2 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு விஜயை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து காயமடைந்த போலீஸ்காரர்கள் 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்து காயமடைந்த போலீஸ்காரர்கள் கோபி, கணபதி ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து பிடிபட்ட 5 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் கொள்ளையன் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.