“இதெல்லாம் வாங்கியே ஆகணும்”... கட்டாயப்படுத்தி விற்பனை செய்யும் ரேசன் கடை ஊழியர்
திருக்கோவிலூர் அருகே கட்டாயப்படுத்தி கூடுதல் பொருட்கள் வாங்க சொன்ன நியாய விலை கடை விற்பனையாளரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது பழைய சிறுவங்கூர் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள நியாய விலை கடையில் சுமதி என்பவர் பணியாளராக உள்ளார். நேற்று காலை நியாய விலை கடையில் அரசால் வழங்கப்படும் அரிசி, பருப்பு, எண்ணெயுடன் கூடுதலாக கட்டாயப்படுத்தி 35 ரூபாய் மதிப்புள்ள பொருள் வாங்க வேண்டும் என நியாய விலை கடை விற்பனையாளர் சுமதி அங்கு வந்த பெண் ஒருவரை வற்புறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் யார் சொன்ன 35 ரூபாய்க்கு பொருள் வாங்க வேண்டும் என்று என கேள்வி எழுப்பினார்.
இருவருக்கும் இடையே நடக்கும் வாக்கு வாதத்தை அவர் தமது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தும் உள்ளார். விற்பனையாளரிடம் பொருட்களுடன் ஒரு கல்லுப்பு போதும் என கூற பணியாளர் சுமதி 35 ரூபாய்க்கு நீங்கள் பொருட்கள் வாங்கி தான் ஆகவேண்டும் என கூறியுள்ளார். அரசின் தரப்பில் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து இதுபோன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது என்று விதி இருந்தும், அதனை மீறும் விதமாக பொதுமக்களை கட்டாயப்படுத்தி பொருட்களை வாங்க செய்யும் இது போன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரேஷன் கடை நடத்துறாங்களா இல்ல மளிகை கடை நடத்துறாங்களா..?
— கவுண்டர் (மோடியின் குடும்பம்) (@Dheeran1991) November 12, 2024
சோப்பு, சீப்பு,மைதா மாவு, கோதுமை மாவு, தீப்பெட்டி..
இதுல ஏதாவது ஒன்னு வாங்கியே ஆகனும்..
🤧🤧
pic.twitter.com/4nwQilBvfC
இந்த சம்பவம் குறித்து வாணாபுரம் வட்ட வழங்கல் அலுவலரிடம் கேட்டபோது இது சம்பந்தமான வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் பார்த்ததாகவும் சம்பந்தப்பட்ட நியாய விலை கடை பணியாளரை அழைத்து விசாரணை மேற்கொண்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.