இன்று முதல் பொருநை அருங்காட்சியகத்தை பொதுமக்கள் சுற்றிப் பார்க்கலாம்..!

 
1 1

 நெல்லை மாவட்டம ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் 'பொருநை அருங்காட்சியகம்' அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 20 -ம் தேதி திறந்து வைத்தார்.

இந்த நிலையில், அருங்காட்சியகம் இன்று (டிச.23) முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. இது குறித்த நுழைவுக் கட்டணம் மற்றும் இதர விவரங்களைத் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. உள்நாட்டுப் பெரியவர்களுக்கு 20 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்குச் சலுகை கட்டணமாக 5 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டுப் பார்வையாளர்களில் பெரியவர்களுக்கு 50 ரூபாயும் சிறியவர்களுக்கு 25.ரூபாயும் வசூலிக்கப்படும் .

பொதுவாக புகைப்பட கேமரா கொண்டு செல்ல 30 மற்றும் வீடியோ கேமராவிற்கு 100 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். அருங்காட்சியகத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள நவீனத் தொழில்நுட்ப (5D) தியேட்டர் ஐந்திணை-க்கு நபர் ஒருவருக்கு 25 ரூபாயும், (7D) படகு சிமுலேட்டருக்கு 25 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை அருங்காட்சியகத்தை பார்வையிடலாம். நுழைவுச் சீட்டு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படும் என்று அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அருங்காட்சியகம் இயங்காது. மேலும், தேசிய விடுமுறை நாட்களான குடியரசுத் தினம், சுதந்திரத் தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களிலும் விடுமுறை அளிக்கப்படும். பொருநை நாகரிகத்தின் பெருமையை விளக்கும் இந்த அருங்காட்சியகத்தைப் பொதுமக்கள் பார்வையிட்டுப் பயன்பெறுமாறு தொல்லியல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.