சொன்ன வாக்குறுதி... அடுத்த நாளே வேலை! மாலுமி நிஷாந்தின் மனைவிக்கு பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

 
1

தூத்துக்குடி மாவட்டம் குரூஸ்பரம் பகுதியைச் சேர்ந்த கப்பல் மாலுமி நிஷாந்த், ஓமன் நாட்டில் கப்பலில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த கடந்த 11-ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

கணவர் உயிரிழப்பு தொடர்பாக பேசிய அவரது மனைவி சரோபின், "தனது கணவரின் உடலை உடனடியாக தூத்துக்குடிக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கணவர் உயிரிழப்பு தொடர்பாக கப்பல் நிறுவனம் இதுவரை முறையான தகவலை தெரிவிக்கவில்லை. கணவரின் இறப்பிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். கப்பல் நிறுவனத்தின் அலட்சியம் காரணமாக எனது கணவர் இறந்து விட்டார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். கப்பல் நிறுவனம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் தனது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

மாலுமி நிஷாந்தின் மறைவை தொடர்ந்து, நேற்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், நிஷாந்தின் மனைவி சரோபினை சந்தித்து ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். மேலும், குடும்பத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்திருந்தார்.

அமைச்சர் கொடுத்த வாக்குறுதியின்படி, அடுத்த நாளே மாலுமி நிஷாந்தின் மனைவி சரோபினுக்கு தமிழக அரசின் மீன்வளத் துறையில் தொகுப்பூதிய அடிப்படையில், தற்காலிக இளநிலை உதவியாளர் (Temporary Junior Assistant) பணிக்கான நியமன ஆணையை அமைச்சர் ஸ்ரீநாத் வழங்கினார்.இதோடு மட்டுமல்லாமல், தந்தை இழந்து தவிக்கும் நிஷாந்தின் குழந்தைகளின் ஒட்டுமொத்த கல்வி செலவையும் அரசே முழுமையாக ஏற்கும் என்றும் அமைச்சர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

மாலுமி நிஷாந்தின் உடலை வெளிநாட்டில் இருந்து தாயகம் கொண்டு வருவதற்கான அனைத்து தூதரக நடவடிக்கைகளையும் தமிழக அரசு மிகத்தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஸ்ரீநாத் குறிப்பிட்டார்.

தங்களின் இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்து, உடனடியாக அரசு வேலை மற்றும் கல்வி உதவி வழங்கியதற்காக தமிழக முதலமைச்சருக்கும், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திற்கும் நிஷாந்தின் மனைவி சரோபின் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.