"பிரதமர் சர்ச்சுக்கு போகிறார்.. முதல்வர் என்றாவது கோவிலுக்குப் போயிருக்காரா?" - தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி கேள்வி!
பிரதமர் மோடி தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யும் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், பிரதமர் மோடி சர்ச்சுக்கு சென்று விட்டார். முதல்-அமைச்சர் என்றாவது கோவிலுக்கு வந்து இருக்கிறீர்களா? என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை,
எப்போது பார்த்தாலும் சனாதனத்தை நான் ஒழிப்பேன். நானும் கிறிஸ்தவன் தான். இந்து மதம் வேற்றுமையை விதைக்கிறது என்று உதயநிதி உளறிக் கொண்டிருக்கிறார். உதயநிதி நீங்கள் துணை முதல்-அமைச்சர். அனைவருக்கும் பொதுவாகத்தான் இருக்க வேண்டும். நாங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறோம். ஆனால் எங்கள் மீது வீண்பழி சுமத்துகிறார்கள்.
தமிழக கலாசாரத்தை யாரெல்லாம் பின்பற்றுகிறார்களோ அவர்களை சங்கிகள் என்று முத்திரை குத்துவார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையான இன்று பாரத பிரதமர் இன்று தேவாலயத்திற்கு சென்றிருக்கிறார். முதல்-அமைச்சர் என்றாவது கோவிலுக்கு வந்து இருக்கிறீர்களா? இதுதான் நாங்கள் வைக்கும் கேள்வி.
தொடர்ந்து நீங்கள் வேற்றுமையை விதைத்து, இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த கிறிஸ்துமஸில் இருந்தாவது நீங்கள் திருந்துங்கள்.
எங்களது தேசிய ஜனநாயக கூட்டணி பலமுடன் உள்ளது. நீங்கள் தனியாக நின்று ஒன்றும் செய்ய முடியாது என்பதைத் தான் நான் மீண்டும் தம்பி விஜய்யிடம் சொல்கிறேன். எல்லோரும் இணைந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும். ஆகையால் வீணாக போய் விடாதீர்கள். நாம் எல்லோரும் சேர்ந்து திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம். திமுகவை வீழ்த்த எல்லோரும் ஒன்று சேர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக, பாஜக கூட்டணி ஏற்கெனவே பலமாக உள்ளது. அவர்கள் வந்தால் கூடுதல் பமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.


