சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடி உயர்வு..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.42,160 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தங்கத்தின் மீதான மோகம் அதிகம், சிறந்த சேமிப்பு காரணியாக தங்கம் பார்க்கப்படுகிறது என பரவலாக பேசப்பட்டு வந்தாலும், தங்கத்தின் விலையேற்றம் அதில் முதலீடு செய்ய காத்திருப்போரை சற்று கதிகலங்கச் செய்கிறது. நடுத்தர வர்கத்தினருக்கு தங்கம் எட்டாக்கனியாகிவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. அந்த அளவிற்கு தங்கம் விலை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம் என்று கூறப்படுகிறது. அதன்படி, சென்னையில் தங்கம் விலை இன்று அதிரடி உயர்வைக் கண்டிருக்கிறது.
நேற்றைய தினம் கிராமுக்கு ரூ.35 அதிகரித்து, ஒரு கிராம் 5,190க்கும், ஒரு சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ரூ.41,520க்கும் விற்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, நேற்று திடீர் உயர்வு கண்டது நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்திருக்கிறது. அதனப்டி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.42,160-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து , ஒரு கிராம் ரூ.5,270க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.40 உயர்ந்து ரூ.68.70க்கு விற்பனையாகிறது.