ஒருவரை எதிர்பார்த்து காத்திருக்கும் வாக்குப்பதிவு நடத்தும் குழுவினர்
ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட வெள்ளிமலை, மலை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் 4 பேர் வாக்களித்த நிலையில், மீதமுள்ள ஒருவரை எதிர்பார்த்து வாக்குப்பதிவு நடத்தும் குழுவினர் காத்திருக்கின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வரும் நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளிமலை பகுதியில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி எண் 245 அமைக்கப்பட்டுள்ளது இந்திய அளவில் ஹாட் டாபிக்காக மாறி உள்ளது. வழக்கமான நடைமுறைப்படி ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 344 வாக்குச்சாவடிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன இதில் முக்கிய அம்சமாக ஆண்டிபட்டியில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதிக்குள் சேதம் அடைந்த கரடு முரடான சாலை மின்சார வசதி இல்லாத எண் 245 வெள்ளிமலை வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வந்து சேர்ந்தன.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில் இன்று மதியம் 11 மணி நிலவரப்படி, மொத்தம் உள்ள ஐந்து வாக்காளர்களில் நான்கு வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்துள்ளனர். இன்னும் ஒருவர் வாக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு நேரம் முடிந்தவுடன் வாக்குச்சாவடிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான தேனி அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அனுப்பி வைக்கப்பட உள்ள இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அலுவலர்கள் இன்று மாலை ஆறு மணிக்கு மேல் வெள்ளிமலை வாக்குச் சாவடியில் இருந்து புறப்பட உள்ளனர். பிரத்தியேகமாக இந்த வெள்ளிமலை வாக்குச்சாவடிக்கு என தனியாக மண்டல அலுவலர், உதவி மண்டல அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர், சப் இன்ஸ்பெக்டர், துணை ராணுவ வீரர், மற்றும் உதவியாளர் என ஆறு நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் கரடு முரடான மலைப்பாதையில் பயணம் செய்ய ஜீப் என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய ஒருவரும் வாக்குப் பதிவு செய்தால் 100 சதவிகித வாக்குப்பதிவு செய்த வாக்கு சாவடியாக வெள்ளிமலை வாக்குச் சாவடி மாறும் என்பது குறிப்பிடத்தக்கது

