தேர்வுக்கு தாமதமாக வந்ததால் கதவை மூடிய போலீசார்! கெஞ்சி கதறி அழுத இளைஞ்ர்கள்

 
புதுச்சேரி

புதுச்சேரியில் ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வுக்கு தாமதமாக வந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.

புதுச்சேரி மாநில காவல்துறையில் ஊர் காவல் படை வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வு முடிவடைந்த நிலையில், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.12 மையங்களில் 500 பதவிக்கு 4,229 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு 12 மணிக்கு முடிகிறது. தேர்வர்கள் 9:30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தி இருந்த நிலையில் புதுச்சேரி உப்பளம் சாலையில் உள்ள தனியார் பள்ளி தேர்வு மையத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் தாமதமாக வந்துள்ளனர். ஆனால் நேரம் முடிந்துவிட்டதாக கூறி தேர்வு மையம் நுழைவாயில் மூடப்பட்டது.

தேர்வு எழுத முடியவில்லையே என கேட்டை பிடித்து பிடித்துக் கொண்டு தேர்வர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அப்போது அவ்வழியே வந்த சபாநாயகர் செல்வத்தின் வாகனத்தை வழிமறித்த தேர்வுகள் தங்களை தேர்வு எழுத அனுமதிக்குமாறும் போக்குவரத்து நெரிசலாலேயே காலதாமதம் ஏற்பட்டது என்று கெஞ்சி மன்றாடினர். அப்போது அதிகாரிகளை சபாநாயகர் செல்வம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஆனாலும் தேர்வர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் தேர்வு எழுத முடியவில்லையே நமது கனவும் நிறைவேற வில்லையே என்ற விரக்தியில் தேர்வுகள் கொண்டு வந்த நுழைவுச்சீட்டு மற்றும் ஆதார் அட்டைகளை சாலையில் வீசிவிட்டு அங்கேயே அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.