37,000 அடி உயரத்தில் பறந்த விமானம்.. அடுத்த சில நொடிகளில்.. 'வாழ்க்கையே போச்சு' என்று கண்களை மூடிய பயணிகள்..!
37,000 அடி உயரத்தில் எல்லாம் சாதாரணமாக சென்றுகொண்டிருந்த விமானம்… சில நிமிடங்களில் திடீரென ஆயிரக்கணக்கான அடிகள் கீழிறங்கியது. பயணிகள் பதற்றமடைந்த நிலையில், விமானிகள் எடுத்த முடிவு தான் நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தது.நடுவானில் என்ன நடந்தது? ஏன் விமானம் அவசரமாக திசை மாற்றப்பட்டது?
நடுவானில் 37,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ஆயிரக்கணக்கான அடிகள் கீழிறங்கி, உலகையே பரபரப்பாக்கிய சம்பவம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways - BA295) விமானத்தில் நிகழ்ந்தது. அக்டோபர் 5, 2026 அன்று லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு போயிங் 777 ரக விமானம் புறப்பட்டது. அயர்லாந்து வான்பரப்பில் 37,000 அடி உயரத்தில் அது பறந்துகொண்டிருந்தபோது, திடீரென சில நிமிடங்களிலேயே 28,000 அடி கீழே இறங்கி, 9,000 அடி உயரத்திற்கு வந்தது.
விமானம் வழக்கம்போல் பறந்துகொண்டிருந்தபோது, அதில் எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு (Technical Issue) ஏற்பட்டது. விமானத்தின் காற்றழுத்தக் கட்டுப்பாட்டு அமைப்பில் (Cabin Pressurization) ஏற்பட்ட கோளாறு காரணமாக, பயணிகள் அமர்ந்திருக்கும் பகுதியில் காற்றழுத்தம் குறையத் தொடங்கியது.பொதுவாக 30,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் காற்றில் ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருக்கும். அங்கு காற்றழுத்தம் குறைந்தால், மனிதர்களால் சுவாசிக்க முடியாது. இதனால் உடனடியாக பயணிகளுக்கான ஆக்சிஜன் முகமூடிகள் (Oxygen Masks) தானாகவே கீழே இறங்கின.
விமானப் பயண கண்காணிப்புத் தரவுகளின்படி, விமானிகள், 'Squawk 7700' என்ற விமானப் போக்குவரத்து அவசரநிலைக் குறியீட்டை அனுப்பி வான்வழித் கட்டுப்பாட்டு மையத்தை எச்சரித்தனர்.
விமானத்தில் அவசர நிலை ஏற்படும்போது, உடனடி உதவி தேவை என்பதை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு தெரிவிக்க 'Squawk 7700' என்ற குறியீடு பயன்படுத்தப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பயணம் ரத்து செய்யப்பட்டு விமானத்தை திரும்பி லண்டனுக்கே கொண்டு வர உத்தரவானது .
விமானத்தின் எடையைக் குறைக்க கொஞ்சம் எரிபொருளை குறைக்க வேண்டும். இதற்காக விமானம் வான்பரப்பில் சில சுற்றுகள் சுற்றிவிட்டு, பின்னர் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் எவ்வித காயமுமின்றி பத்திரமாகத் தரையிறக்கப்பட்டனர்.

