பேருந்தில் உயிரிழந்த நபர்! சடலத்துடன் உடன் வந்தவர்களை சாலையில் இறக்கிவிட்ட நடத்துநர்
அரசு பேருந்துவில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நபரின் உடலையும் அவருடன் பயணித்த இருவரையும் நடுவழியில் இரவில் இறக்கிவிட்ட தற்காலிக ஓட்டுனரை பணி நீக்கமும், நடத்துனரை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பீமாமண்டாவி (60), அசோக்குமார்ஓயான் (19) கஜுனுகொடோபி (20) ஆகிய மூன்று பேரும் விக்கிரவாண்டியில் செயல்படும் தனியார் தீவன கம்பெணியில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்தில் மூவரும் சென்றுள்ளனர். அப்போது செங்கல்பட்டு அருகே சென்றபோது பீமாமண்டாவிற்கு உடல்நல குறைவு ஏற்பட்டு பேருந்துவில் இறந்துள்ளார்.
இதனையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றவர்களை செங்கல்பட்டு மேம்பாலத்திற்கு அருகில் இரவு என்று கூடபாராமல் இறந்த பீமாமண்டாவி (60) மற்றும் அவரது இரு பேரன்களான அசோக்குமார்ஓயான் (19) கஜுனுகொடோபி (20) ஆகிய மூவரையும் நடுவழியில் அரசு பேருந்துவின் தற்காலிக ஓட்டுனர் ராம்குமார் மற்றும் நடத்துனர் ரசூல் ரகுமான் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். அதன்பின்பு தாத்தாவின் உடலை இரு பேரன்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அவ்வழியாக வந்தவர்களின் உதவியால் ஆம்புலண்ஸ் மூலம் கொண்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு காவல் நிலைய போலீசார் 174 வழக்காக பதிவு செய்து நடுவழியில் இறக்கி விட்டு சென்ற நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மீது துறை ரீதியான நடவடிக்கை பரிந்துரை செய்தனர். அந்த பரிந்துரையின் பேரில் விழுப்புரம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் நடுவழியில் இறக்கிவிட்ட தற்காலிக ஓட்டுனர் ராம்குமாரை பணி நீக்கமும்(டிஸ்மிஸ்) நடத்துனர் ரசூல் ரகுராமனை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளார்.