இன்று தொடங்குகிறது ஊட்டி ரோஜா கண்காட்சி..!!

 
Q

கோடை வெயில் வாட்டி வதைப்பதால், அதை சமாளிக்க பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகை யில், நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி,ரோஜா கண்காட்சி, படகு போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், ஊட்டி விஜயநகரம் பகுதியில் உள்ள ரோஜா பூங்காவில் 21-வது ரோஜா கண்காட்சி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 18-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

இதையொட்டி 4 ஆயிரம் ரகங்களை சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா செடிகளில் பல வண்ணங்களில் பூக்கள் பூத்துக்குலுங்குகிறது. இதுதவிர பூங்காவில் பாரம்பரிய ரோஜாக்களுக்கு என தனியாக இடம் உள்ளது. இங்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாரம்பரியமிக்க ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளதால், தற்போது மலர்கள் பூத்து உள்ளது.

இந்த ஆண்டு ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சிக்காக பறவைகளை பாதுகாப்போம் என்ற கருத்தை மையப்படுத்தி, பல NEW வண்ணங்களை கொண்ட ரோஜா மலர்களை கொண்டு அன்னப்பறவை, ஹார்ன்பில் எனப்படும் இருவாச்சி, தூக்கனாங்குருவி, கழுகு, சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டு, குழந்தைகள் முதல் அனைவரையும் கவரும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

5 நாட்கள் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் பட்சத்தில் மேலும் சில நாட்கள் கண்காட்சி நீட்டிக்கப்படும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.