தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 53.74 லட்சமாக உயர்வு

 
வேலைவாய்ப்பு அலுவலகம்

தமிழகத்தில் 53 லட்சத்து 74 ஆயிரம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்து கொண்டு இருப்பதாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

Image

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி வரை, மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 53,74,116 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஆண்கள் 24,74,985 பேரும், பெண்கள் 28,98,847 பேரும், 284 பேர் மூன்றாம் பாலினத்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தனியார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்! – தமிழக அரசு நடத்துகிறது

பதிவு செய்துள்ளவர்களில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 10 லட்சத்து 69 ஆயிரத்து 609 பேரும், 19 முதல் 30 வயது வரையுள்ள உள்ள கல்லூரி மாணவர்கள் 23 லட்சத்து 62 ஆயிரத்து 129 பேரும், 31 முதல் 45 வயது வரையுள்ளவர்கள் 16 லட்சத்து 94 ஆயிரத்து 518 பேரும் உள்ளனர். அதுபோலவே 46 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 40 ஆயிரத்து 537 பேரும்; 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 7 ஆயிரத்து 323 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 803 பேர் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.