தூக்குக் கயிறு காத்திருக்கிறது! துணை விமானிக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்பு..!!
துபாயில் இருந்து டெல் அவிவ் நகருக்கு சென்ற, 'பிளை துபாய்' நிறுவனத்தின் விமானத்தை, அதன் துணை விமானி கடத்த முயன்றார்.
கடுமையாக தாக்கப்பட்ட நிலையிலும் துணிச்சலுடன் போராடி சதி திட்டத்தை இந்திய விமானி ஸ்மிட் மச்சார் முறியடித்தார். கைது செய்யப்பட்ட ஓமன் நாட்டு துணை விமானி ஹமாம் அல் ஹம்மாமியிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் நடத்த முயற்சித்தது பயங்கரவாத சதிச்செயலே என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பே, அல்-ஹம்மாமி இஸ்ரேலுக்கு விமான சேவை வழங்கி வரும் விமான நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்ததாகவும், அந்த நாட்டிற்குச் சென்று வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. துணை விமானிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மிகக் கடுமையான தண்டனையை வலியுறுத்த முடிவு செய்துள்ளனர்.சவுதி மற்றும் ஓமன் அதிகாரிகளும் அல்-ஹம்மாமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட விமானி, இஸ்ரேல் செல்லும் விமானத்தை இயக்க எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்த கேள்விகளுக்கு மத்தியில் இந்த விசாரணை நடைபெறுகிறது.

