ராஜ்யசபா தேர்தல்- ராமதாஸ் தரப்பினருக்கு வந்த அதிர்ச்சி தகவல்
ராஜ்யசபா தேர்தலுக்கான திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் ஆறு பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டன. ராமதாஸின் உதவியாளர் சாமிநாதன் உட்பட 6 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுகவில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டைண்டன் ரவீந்திரன் ஆகியோரும் காங்கிரஸ் கட்சி சார்பில் கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிக சார்பில் சுதீசும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் தம்பிதுரையும், கூட்டணிக் கட்சியான பாமக சார்பில் அன்புமணி ராமதாஸும் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதோடு பாமக நிறுவனர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் உட்பட 6 பேர் சுயேட்சையாகவும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். கட்சி சார்பாக போட்டியிட்ட அனைவரின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு, சுயேட்சையாக போட்டியிட்ட அனைவரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு, “தேர்தல் விதிகளில் அனைத்து நடைமுறைகளும் சரியாக உள்ளது என தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டுள்ளார். சிலர் ஆட்சேபனை தெரிவித்தனர். இதற்கு மேல் ஆட்சேபனை இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம். அன்புமணி வீட்டில் வேலைக்காரராக இருந்த ஒருவர் வேட்புமணு தாக்கல் செய்ததை நீங்கள் பிரேக்கிங் செய்தியாக எடுத்தீர்கள். சுயேட்சையாக தாக்கல் செய்ததை பாமகவிற்கு போட்டியாக தாக்கல் செய்ததாக செய்தி வெளியிட்டீர்கள். ராமதாஸ் கையொப்பம் இல்லாமல், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழிவு இல்லாமல் எந்த சான்றும் இல்லாமல் செய்த வேட்புமனுவை பெரிய செய்தியாக எடுத்தீர்கள். அன்புமணி ராமதாஸை அசிங்க படுத்த செய்கிறார்கள். மருத்துவர் ராமாதாஸுக்கு இழுக்கு செய்யும் வேலையை தொடர்ந்து செய்கின்றனர்” என கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்த அவரது உதவியாளர் சுவாமிநாதன் மற்றும் அவரது வழக்கறிஞர்கள், அன்புமணி தாக்கல் செய்திருக்கும் மனுவை ஏற்கக் கூடாது என தாங்கள் தெரிவித்த ஆட்சேபனைகளை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்கவில்லை என குற்றம் சாட்டினர். அன்புமணியின் வேட்புமனுவை நிராகரிக்கும் வரை தங்களின் மேல்முறையீடு செய்து கொண்டே தான் இருப்போம் எனவும் தெரிவித்தனர்.

