மக்களுக்கு அடுத்த ஷாக்..! வரும் 1ம் தேதி முதல் எகிறப்போகும் டோல்கேட் கட்டணங்கள்..! 28 டோல்களுக்கு புதிய தொகை..!
தமிழகத்தில் உள்ள சுமார் 28 முக்கிய சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 5% முதல் 15% வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய கட்டண உயர்வு மற்றும் அதனுடன் தொடர்புடைய சில மாற்றங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆண்டுதோறும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணங்களில் மாற்றம் செய்து உயர்த்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள சுமார் 28 முக்கிய சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக சுங்கக் கட்டணம் 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.இந்த உயர்வு அனைத்து வகை வாகனங்களுக்கும் பொருந்தும். குறிப்பாக கார், ஜீப், வேன் போன்ற இலகுரக வாகனங்களுக்கு ஒரு முறை பயணம் செய்யும் கட்டணம் தற்போது உள்ளதை விட ரூ.10 முதல் ரூ.40 வரை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
- இலகுரக வாகனங்கள் (கார், ஜீப், வேன்): ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணம் தற்போதுள்ளதை விட ₹10 முதல் ₹40 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- கனரக வாகனங்கள் (பேருந்து, லாரி): இவற்றிற்கான கட்டணம் ₹50 முதல் ₹200 வரை உயரக்கூடும்.
- மாதாந்திர பாஸ்: உள்ளூர் வாகனங்கள் மற்றும் அடிக்கடி பயணிப்போருக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ₹300 முதல் ₹350 வரை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள பரனூர், சூரப்பட்டு, வானகரம் போன்ற சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது. அதேபோல் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள திண்டிவனம், ஆத்தூர், கிருஷ்ணகிரி, சமயபுரம், கப்பலூர், நாங்குநேரி போன்ற இடங்களிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்த புதிய கட்டண உயர்வு நடைமுறைக்கு வர உள்ளது.
மேலும் ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் முக்கியமான ஒரு மாற்றத்தையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணம் பெறும் முறையை முழுமையாக நிறுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இனிமேல் FASTag அல்லது UPI போன்ற டிஜிட்டல் முறைகளின் மூலம் மட்டுமே சுங்கக் கட்டணம் செலுத்தும் நடைமுறையை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது FASTag இல்லாமல் சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களிடம் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் நடைமுறை ஏற்கனவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த வருடாந்திர பாஸ் திட்டத்தின் கட்டணமும் இந்த ஆண்டில் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
தற்போது ரூ.3,000 ஆக உள்ள இந்த ஆண்டு பாஸ் கட்டணம் ரூ.3,100 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாஸ் மூலம் ஓராண்டில் 200 முறை வரை சுங்கச்சாவடிகளைக் கடக்க முடியும்.
சரக்கு போக்குவரத்து செலவு: லாரிகளுக்கான கட்டணம் உயர்வதால் காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை சந்தையில் உயர வாய்ப்புள்ளது.
தனியார் பயணங்கள்: சொந்தக் காரில் வெளியூர் செல்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும்.

