மக்களுக்கு அடுத்த ஷாக்..! அரிசி விலை கிடுகிடு உயர்வு..!
தமிழகத்தில் அரிசி உணவுகளும் அரிசியில் செய்யப்படும் தின்பண்டங்களும் எப்போதும் நல்ல வரவேற்பைப் பெறுவது வழக்கம்.இந்நிலையில் அரிசி விலை உயர்வு பல்வேறு தரப்பினரைப் பாதித்துள்ளது.
கடந்த மாதம் ரூ.65க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பொன்னி அரிசி, தற்போது ரூ.80க்கு விற்பனையாகிறது.பாபட்லா, ஆர்என்ஆர் ரக அரிசியின் விலை ரூ.55ல் இருந்து ரூ.70ஆக உயர்ந்துவிட்ட நிலையில், சீரகச் சம்பா ரூ.120ல் இருந்து ரூ.200ஆக உயர்ந்துள்ளது.சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு கிலோ அரிசி விலை ரூ.10 முதல் ரூ.15 வரையும், 25 கிலோ மூட்டை அரிசி ரூ.250 முதல் ரூ.375 வரையும் அதிகரித்துள்ளது.
25 கிலோ கொண்ட ஒரு சிப்பம் அரிசி 350 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இட்லி அரிசி 35 ரூபாயில் இருந்து 40 ரூபாய்க்கு விலை உயர்ந்து விட்டது. இப்போது இரண்டாவது முறையாக 50 ரூபாயாக இட்லி அரிசி விலை உயர்ந்துள்ளது. இதற்கு கர்நாடகத்தில் நெல் விளைச்சல் குறைந்தது தான் முக்கிய காரணம் என்கிறார்கள்.
இதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு அரிசி லோடு வருவது அங்கிருந்து வெகுவாக குறைந்துவிட்டது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க கர்நாடகா மாநில வியாபாரிகள் தமிழகத்தில் விளைவிக்கப்படும் நாட்டு பொன்னி ரகத்தை கொள்முதல் செய்து வருகிறார்கள். இதன் காரணமாக ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நாட்டுப் பொன்னி அரிசி இப்போது ரூ.85-க்கு விற்கப்படுகிறது.
கடந்த கோடை சாகுபடியில் ஒரு லட்சத்து 88 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 88 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் ஆகி உள்ளது. இது தவிர ஆற்றுப் பாசனத்தில் குறுவை சாகுபடி நடைபெறாத நிலையில் தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டம் ஒன்றை அறிவித்திருந்தாலும் அரசு நிர்ணயித்த ஒரு லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியானது இந்த ஆண்டு 60,000 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதிலும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால் மகசூல் குறையும் அபாயம் உள்ளது. எனவே வறட்சி காரணமாக நெல் சாகுபடியில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பின்னடைவு அரிசி விலை கடுமையாக உயர்வதற்கான காரணமாகி விட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

