மக்களுக்கு அடுத்த ஷாக்..! தமிழகத்தில் உச்சம் தொட்ட கருப்பட்டி விலை..!
இந்த ஆண்டு பருவகால நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் 'எல்நினோ' பாதிப்புகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் தென்மாவட்டங்களில்தான் பனைத்தொழில் அதிக அளவில் நடைபெறுகிறது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களை குறிப்பிட்டு கூறலாம்.
தமிழகத்தில் அதிக பனை மரங்களை கொண்ட மாவட்டமாக ராமநாதபுரம் விளங்குகிறது. அங்கு சாயல்குடி, நரிப்பையூர், மாரியூர், கன்னிராஜபுரம், மேலச்செல்வனூர், மலட்டாறு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான பனைத் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பதநீர் சீசன் தொடங்கிவிடும். பதநீரை காய்ச்சி கருப்பட்டியாக தயார் செய்கின்றனர். தொழிலாளர்களிடம் இருந்து கருப்பட்டிகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி விற்பனை செய்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தயார் செய்யப்படும் கருப்பட்டிகள் அளவில் பெரிதாக இருக்கும். இந்த ஆண்டு தயார் செய்த கருப்பட்டிகளைவிட, கடந்த ஆண்டுக்குரிய கருப்பட்டிக்கு விலையும். சுவையும் அதிகம்.
இதுபோல் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கருப்பட்டி தனி சிறப்பு பெற்றது. அளவில் சிறியதாக இருக்கும். சாயல்குடி கருப்பட்டிகளைவிட, உடன்குடி கருப்பட்டிக்கு விலை அதிகம். இதுபோல் பனங்கற்கண்டு. பனஞ்சுக்கு, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்டவற்றையும் பனைத் தொழிலாளர்கள் தயார் செய்கிறார்கள். மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இந்த ஆண்டு மழை குறைவால் கருப்பட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதாக தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து பனை நாடார் மகாஜன சங்க நிறுவனத் தலைவர் சிலுவை நாடார் கூறியபோது, “பசுபிக் பெருங்கடலில் ஏற்படும் எல்நினோ தாக்கத்தின் காரணமாக தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம் அதிகமாக ஏற்பட்டுள்ளது. கருப்பட்டியின் முக்கிய உற்பத்தி பகுதிகளாக விளங்கும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
பனை மரங்கள் வளர்ச்சியடைய தேவையான மழை முறையாக பெய்யாததால், பதநீர் தரக்கூடிய பனைப் பாலைகள் முழுமையான வளர்ச்சி அடையவில்லை. வழக்கமாக 6 முதல் 7 மாதங்கள் வரை நீடிக்கும் பருவம், தற்போது 4 முதல் நான்கரை மாதங்களிலேயே முடிவடைகிறது. இதனால் பதநீர் உற்பத்தி குறைந்து, அதன் தாக்கம் நேரடியாக கருப்பட்டி உற்பத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சுமார் ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்ட கருப்பட்டி, தற்போது ரூ.450 வரை விலை உயர்ந்துள்ளது. உற்பத்தி குறைவு மற்றும் விலை உயர்வு காரணமாக பொதுமக்களுக்கு கருப்பட்டி வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பருவமழை முறையாக பெய்தால் மட்டுமே பனை மரங்களில் போதுமான பதநீர் கிடைக்கும். ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளிலும் எல்நினோ போன்ற பருவநிலை மாற்றங்களின் தாக்கம் தொடர்ந்தால் பனைத் தொழிலும், கருப்பட்டி உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் பனையேறிகளின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

