மக்களுக்கு அடுத்த ஷாக்..! அரிசி விலை மூட்டைக்கு ரூ.400 ரூபாய் உயர்வு..!

 
rices

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அரிசி விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. மளிகை கடைகளில் சில்லறை விற்பனையில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ. 5 முதல் ரூ. 15 வரை உயர்ந்துள்ளது. 26 கிலோ கொண்ட அரிசி மூட்டை ரூ. 150 முதல் ரூ. 400 வரை அதிகரித்துள்ளது.

அரிசி தேவைக்கு தமிழ்நாடு வெளிச்சந்தைகளை அதிகம் நம்பியிருப்பதே இந்த விலை உயர்விற்கு காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களையே அதிகம் நம்பியுள்ளது. இம்மாநிலங்களில் வறட்சி, மழைப் பொழிவு மற்றும் சாகுபடி குறைவு ஆகிய காரணங்களால் அரிசி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ​காவிரியில் நீர் வரத்து குறைந்து டெல்டா பகுதிகளில் நீர் பற்றாக்குறையால் இம்முறை குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவு கைக்கொடுக்கவில்லை. இதனால், உள்ளூர் சன்ன ரக நெல் சாகுபடி குறைந்துள்ளது. இந்த காரணத்தாலும் மாநிலத்தில் விலை உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் மாதமான ஆடியில் சுபநிகழ்ச்சிகள் காரணமாக தேவை அதிகரிப்பதுடன், எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்ததும் விலை உயர்விற்கு மற்றுமொரு காரணம் என தெரிகிறது.

​ரகம் வாரியாக விலை உயர்வு விவரம்

மைசூர் -ஆந்திரா பொன்னி (பச்சரிசி) பழைய விலை ரூ. 50 - ரூ. 52 ஆக இருந்த நிலையில், தற்போதைய விலை ரூ. 65 ஆக உயர்ந்துள்ளது. கிலோவிற்கு ரூ.13 வரை உயர்ந்துள்ளது. இதேபோல், டீலக்ஸ் மற்றும் ஆர்என்ஆர் புழுங்கல் அரிசி முன்னதாக ரூ. 45 - ரூ. 50 வரை விற்பனையாகி வந்தநிலையில், தற்போது ரூ. 15 வரை உயர்ந்து ரூ. 60-க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகிறது.

சன்ன ரக அரிசி முன்பு ரூ. 64க்கு விற்பனையாகிய சூழலில் இப்போது ரூ. 11 வரை உயர்ந்து ரூ. 75க்கு அது விற்கப்படுகிறது. இதையடுத்து இட்லி அரிசியும் ரூ. 7 உயர்வைக் கண்டுள்ளது. ஆகையால், அது தற்போது ரூ. 50 முதல் ரூ. 52 வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது.

உயர்தர ரகங்களான எச்எம்டி, கொல்லம், பொன்னி புழுங்கல் உள்ளிட்டவை ரூ. 1,100 முதல் ரூ. 1,250 வரையிலான விலையில் விற்பனையான நிலையில், மூட்டைக்கு ரூ. 100 முதல் ரூ. 300 வரை விலை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ரைஸ் மில் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் துரைராஜ் கூறுகையில், "சில்லறை விற்பனையில் அரிசி விலை கிலோவுக்கு ஐந்து முதல் பத்து ரூபாய் வரை விலை ஏறி உள்ளது. நெல் விலை உயர்வால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது டெல்டா பகுதிகளில் இருந்து நெல் வரத்து வழக்கம் போல் உள்ளது. ஆகையால், பாதிப்பு என்பது வெளியே தெரியாமல் இருந்து வந்தது.

சம்பா சாகுபடிக்கான மழை குறைந்ததால் தமிழ்நாட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, அசாம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நெல் மூட்டைகள் வந்து கொண்டிருக்கிறது. 26 கிலோ அரிசி மூட்டைக்கு ரூ. 50 ரூபாய் வரையிலும் ரூ. 75 கிலோ மூட்டைக்கு ரூ. 300 வரையிலும் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வு குறித்து வெளியே சொல்ல கூடாது என சங்கத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

 

தொடர்ந்து மளிகை கடை மற்றும் அரிசி வியாபாரிகள் இதுகுறித்து கூறுகையில், "கடந்த இரண்டு மாதங்களில் அரிசி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் தினசரி கூலி வேலைக்கு செல்பவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது எல் நினோ காரணமாக மழை பொய்த்து போனதால் மேலும் அரிசி விலை உயர வாய்ப்பு உள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தனர்.

அரிசி விலை உயர்வு குறித்து கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த குடும்ப தலைவி செல்வி என்பவர் கூறுகையில், "எங்கள் வீட்டில் நான்கு பேர் உள்ளோம். கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று வருகிறோம். எங்களின் குறைந்த சம்பளத்தில் குடும்பம் நடத்தி வரும் நிலையில், மளிகை பொருட்கள் விலை உயர்வை தொடர்ந்து தற்போது அரிசி விலை உயர்ந்துள்ளது. இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். தமிழ்நாடு அரசு பல்வேறு அறிவிப்புகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், எங்களைப் போன்ற சாமானியர்கள் பாதிப்படையாமல் இருக்க அரிசி விலை மற்றும் அத்தியாசிய பொருட்களின் விலை உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.