மக்களுக்கு அடுத்த ஷாக்..! அடுத்த 2 மாதங்களில் டி.வி., செல்போன் விலை மேலும் உயர வாய்ப்பு..!
மைக்ரோசிப்களின் கடும் தட்டுப்பாடு மற்றும் ஏ.ஐ. (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக, அடுத்த இரண்டு மாதங்களில் டி.வி., மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் விலைகள் கணிசமாக உயரும் எனத் தொழில்துறை வட்டாரங்கள் எச்சரிக்கின்றன. கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சி அறிக்கையின்படி, கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது வரும் மார்ச் மாதத்திற்குள் மைக்ரோசிப்களின் விலை 120 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. இந்த இக்கட்டான சூழலால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், மின்னணு நிறுவனங்கள் தங்களின் லாபத்தைப் பாதுகாக்க தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை ஏற்கனவே குறைக்கத் தொடங்கிவிட்டன.
ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரை விலை உயர்வு ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், இதன் தாக்கம் விற்பனையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் போன்களின் விலை அதிகரிப்பால் வரும் மாதங்களில் அதன் விற்பனை 10 முதல் 12 சதவீதம் வரை குறையக்கூடும் என்று சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். நுகர்வோர் தங்களுக்குத் தேவையான மின்னணு சாதனங்களை இப்போதே வாங்குவது லாபகரமாக இருக்கும் என்றும், வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து முன்னணி பிராண்டுகளும் தங்களின் விலை உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.


