மக்களுக்கு அடுத்த ஷாக்..! பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது Nayara நிறுவனம்!
இந்தியாவின் முன்னணி தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான நயாரா, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது.அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 -ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 -ம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தியன் ஆயில் (IOCL), பாரத் பெட்ரோலியம் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) உள்ளிட்ட அரசு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தங்களது விற்பனை நிலையங்களில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் பழைய விலையிலேயே விநியோகித்து வருகின்றன.
பெட்ரோல் லிட்டருக்கு ₹107.76-க்கும், டீசல் லிட்டருக்கு ₹99.55-க்கும் விற்கப்பட்டு வரும் வேளையில், நயாரா நிறுவனத்தின் தனியார் பங்குகளில் மட்டும் பெட்ரோல் விலை ₹112.76 ஆகவும், டீசல் விலை ₹102.55 ஆகவும் உயர்ந்துள்ளது.
முன்னதாக, ஈரான் மோதலால் உலகளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டபோது, கடந்த மார்ச் 26 அன்று நயாரா நிறுவனம் இதே அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியிருந்தது. பின்னர், மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்து சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்ததைத் தொடர்ந்து, ஜூலை 1 அன்று அந்த விலை உயர்வை நிறுவனம் திரும்பப் பெற்றது. இந்நிலையில், சந்தை கொள்முதல் செலவிற்கும் சில்லறை விற்பனை விலைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் தனியார் நிறுவனம் மீண்டும் இந்த விலையேற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

