மக்களுக்கு அடுத்த ஷாக்..! இண்டிகோவில் விமானத்தில் திடீர் கட்டண உயர்வு: கைக்குழந்தை, கூடுதல் லக்கேஜ் கட்டணம் உயர்வு!
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), உள்நாட்டு விமானப் பயணிகளுக்கான கூடுதல் சேவைக் கட்டணங்களை (Ancillary Charges) எவ்வித முன்னறிவிப்புமின்றி உயர்த்தியுள்ளது. குறிப்பாக கைக்குழந்தைகளுடன் பயணிப்போர், கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்வோர் மற்றும் சிறப்புச் சேவைகளைப் பெறுவோருக்கு இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடிப்படை டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படாதபோதிலும், பயணிகள் வழக்கமாகப் பயன்படுத்தும் விருப்பச் சேவைகளுக்கான (Optional Services) கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. குறைந்த கட்டண சேவை வழங்கி வரும் இண்டிஜோ நிறுவனம், தனது செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்கவே இந்த வழக்கமான கட்டணக் கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த புதிய கட்டணங்கள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
-
கைக்குழந்தைகளுக்கான கட்டணம் ரூ.1,000 உயர்வு:
2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை மடியில் அமர்த்தி அழைத்துச் செல்வதற்கானக் கட்டணம் ஒரு வழிப் பயணத்திற்கு ரூ.2,000-லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் கொண்ட குடும்பத்தின் பயணத்தில், குழந்தைகளுக்கான கட்டணம் மட்டுமே ரூ.6,000 ஆக அதிகரிக்கும். (3 நாட்கள் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வயதுச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்).
-
கூடுதல் லக்கேஜ் கட்டணம் (Excess Baggage):
அனுமதிக்கப்பட்ட எடையைத் தாண்டி எடுத்துச் செல்லப்படும் கூடுதல் லக்கேஜ்களுக்கு, ஒரு கிலோவிற்கு ரூ.700 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது (கிலோவிற்கு ரூ.100 உயர்வு).
சேவைக் கட்டண ஒப்பீட்டு அட்டவணை:
| சேவை வகை | பழைய கட்டணம் | புதிய கட்டணம் | வித்தியாசம் |
| கைக்குழந்தை பயணம் (உள்நாட்டு சேவை) | ₹2,000 | ₹3,000 | +₹1,000 |
| கூடுதல் லக்கேஜ் (ஒரு கிலோவிற்கு) | ₹700 | ₹800 | +₹100 |
| தனியாகப் பயணிக்கும் சிறுவர்கள் (Unaccompanied Minor) | ₹5,000 | ₹5,999 | +₹999 |
| முன்னுரிமை செக்-இன் மற்றும் போர்டிங் (Priority Service) | ₹450 | ₹650 | +₹200 |
| பயணச் சான்றிதழ் (Travel Certificate) | ₹200 | ₹300 | +₹100 |
(குறிப்பு: தனியாகப் பயணிக்கும் சிறுவர்களுக்கானக் கட்டணம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கப்பட வேண்டும்).

