மக்களுக்கு அடுத்த ஷாக்..! தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டணம் 67% உயர்வு..!
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்கான ஹால்மார்க்கிங் கட்டணத்தை இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) திருத்தியுள்ளது. அதன்படி, தங்க நகைகளுக்கான ஹால்மார்க்கிங் கட்டணம் ரூ.45-ல் இருந்து ரூ.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வெள்ளிப் பொருட்களுக்கான ஹால்மார்க்கிங் கட்டணம் ரூ.35 ஆக தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஹால்மார்க் செய்து தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணம் ஏற்படும்.
தங்கம், வெள்ளி நகை மற்றும் நாணயங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றை இந்திய தர நிர்ணய அமைப்பான BIS-இன் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கும். இங்கே அந்த தங்கமும் வெள்ளியும் ஆய்வு செய்யப்பட்டு அதன் கேரட் அளவு அதில் எவ்வளவு தங்கம் உள்ளது என்ன வகையான ஆபரணம் என்பன உள்ளிட்டவற்றை எல்லாம் தர ஆய்வு செய்து ஹால்மார்க் முத்திரை வழங்கும். இதன் பின்னர் தான் இவை கடைகளுக்கு வந்து நமக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் ஹால்மார்க் கட்டணங்களில் இந்திய தர நிர்ணய அமைப்பு முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. குறிப்பாக, தங்க ஹால்மார்க் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய தர நிர்ணய அமைப்பின் திருத்தப்பட்ட ஒழுங்குமுறை விதிகளின்படி, தங்கத்திற்கான ஹால்மார்க் கட்டணம் 67% உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு தங்கப் பொருளுக்கு ஹால்மார்க் செய்ய 45 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணம் 30 ரூபாய் உயர்த்தப்பட்டு, 75 ரூபாயாக உள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, ஹால்மார்க் மையங்களுக்கு அனுப்பப்படும் தங்க பொருட்களுக்கு குறைந்தபட்ச சரக்கு கட்டணமாக 200 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான நகைகளை ஹால்மார்க் செய்வோருக்கு இதன் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். ஹால்மார்க் கட்டணம் உயர்வால் நகை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அதனை வாடிக்கையாளர்கள் மீதே சுமத்த வாய்ப்புள்ளது.
வெள்ளி பொருட்களை பொறுத்தவரை எந்தவித கட்டண உயர்வும் செய்யப்படவில்லை. வெள்ளி பொருட்களுக்கான ஹால்மார்க் கட்டணம் பழையபடி ஒரு பொருளுக்கு 35 ரூபாய் என்ற நிலையிலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

