மக்களுக்கு அடுத்த ஷாக்..! 15 ஆண்டு பழைய வாகனங்களை பறிமுதல் செய்ய அரசு உத்தரவு..!

 
1 1

கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி சட்ட மேலவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, 15 ஆண்டுகளை கடந்த பழைய வாகனங்களை அரசு பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் வாகன ஸ்க்ராப்பேஜ் கொள்கையின் அடிப்படையில், அரசு வாகனங்கள் 15 ஆண்டுகள் முடிந்ததும் கட்டாயமாக குப்பையாக்கப்பட வேண்டும். வணிக வாகனங்களுக்கு மட்டும் 5 ஆண்டுகள் கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார். ஆனால், அரசு துறைகளின் பழைய வாகனங்களுக்கு இந்த சலுகை இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மாநிலம் முழுவதும் சுமார் 1.38 கோடி பழைய வாகனங்களை ஸ்க்ராப் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருப்பதாக அமைச்சர் ராமலிங்கா ரெட்டி தெரிவித்தார். குறிப்பாக தீயணைப்புத் துறை உள்ளிட்ட சில துறைகளில் குறைவாக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு விலக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மத்திய அரசின் வாகன ஸ்க்ராப்பேஜ் கொள்கை என்பது, அதிக மாசுபாட்டை ஏற்படுத்தும் பழைய வாகனங்களை படிப்படியாக ஒழிப்பதே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது, எரிபொருள் சேமிப்பை ஊக்குவிப்பது, புதிய வாகனங்கள் வாங்குவதன் மூலம் ஆட்டோமொபைல் துறையை ஊக்குவிப்பது ஆகியவை இதன் முக்கிய இலக்குகளாகும். தனியார் வாகனங்களுக்கு 20 ஆண்டுகள் கடந்த பிறகு கட்டாயமாக ‘பிட்னஸ் டெஸ்ட்’ செய்ய வேண்டும். அந்த பரிசோதனையில் தோல்வியடையும் வாகனங்கள் கட்டாயமாக ஸ்க்ராப் செய்யப்பட வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. வாகனங்களை ஸ்க்ராப் செய்யும் உரிமையாளர்களுக்கு புதிய வாகனம் வாங்கும்போது வரி சலுகை மற்றும் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.