மக்களுக்கு அடுத்த ஷாக்..! அமுல் நெய்,வெண்ணெய் விலை கிடுகிடு உயர்வு..!!

 
11

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், நாட்டின் முன்னணி பால் கூட்டுறவு நிறுவனமான 'அமுல்' (Amul), தனது நெய் மற்றும் வெண்ணெய் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது.


புதிய விலை விவரங்கள்:

  • 1 கிலோ நெய் (Carton): முன்பு ரூ. 630-க்கு விற்ற இது, தற்போது ரூ. 50 உயர்த்தப்பட்டு ரூ. 680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • 500 கிராம் தூய நெய் பாக்கெட்: இதன் விலை ரூ. 325-ல் இருந்து ரூ. 20 அதிகரித்து ரூ. 345 ஆகியுள்ளது.
  • 100 கிராம் வெண்ணெய் பாக்கெட்: முன்பு ரூ. 63-ஆக இருந்த இதன் விலை தற்போது ரூ. 66 ஆக உயர்ந்துள்ளது.
  • 500 கிராம் வெண்ணெய் பாக்கெட்: ரூ. 310-ல் இருந்து ரூ. 15 அதிகரித்து, தற்போது ரூ. 325-க்கு விற்கப்படுகிறது.

ஆன்லைன் தளங்களிலும் அமுல் பசு நெய் ஒரு லிட்டர் ரூ. 740 வரையிலும், சாகர் நெய் ரூ. 710-க்கும் பட்டியலிடப்பட்டுள்ளன. இருப்பினும், பல ஆன்லைன் தளங்களில் தூய நெய் மற்றும் எருமை நெய் போன்ற வகைகள் 'விற்றுத் தீர்ந்தன' (Sold out) எனக் காட்டப்பட்டுள்ளன.

குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் போலி/போலி கலப்பட நெய்களுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், தரமான பிராண்டட் நெய்களுக்கான தேவை சந்தையில் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அமுல் பசு நெய்க்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.


முன்னதாக, செப்டம்பர் 2025-ல் பால் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12%-லிருந்து 5%-ஆகக் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமுல் நிறுவனம் தனது 700-க்கும் மேற்பட்ட பொருட்களின் விலையைக் குறைத்தது. அப்போது 1 லிட்டர் நெய் ₹650-லிருந்து ₹610 ஆகவும், 500 கிராம் வெண்ணெய் ₹305-லிருந்து ₹285 ஆகவும் குறைக்கப்பட்டது. ஆனால், தற்போதைய தீபாவளி கால விலை உயர்வால், வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பின் மூலம் கிடைத்த பலன்கள் பெரும்பாலானவை பறிபோயுள்ளன.