மக்களுக்கு அடுத்த ஷாக்..!! தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்வு..!!
தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை, 21 லட்சம் டன். இதை, ஈடு செய்யும் வகையில் ஆண்டுக்கு, 30 லட்சம் டன் உயர் ரக சன்ன அரிசியை, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
கடந்தாண்டு கர்நாடகாவில் சில இடங்களில் மழை இல்லாததால், உயர் ரக சன்ன நெல் விளைச்சல் பாதித்துள்ளது. இது தவிர, லாரி வாடகை கட்டணம், 25 சதவீதம் உயர்ந்துள்ளதால், வெளிமாநிலங்களில் இருந்து வரும் அரிசி கிலோவுக்கு, 5 முதல், 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
அதேநேரம், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில், கடந்த பருவத்தில் நெல் விளைச்சல் குறைவு. கோடை மழை மற்றும் தற்போதைய பருவமழை கை கொடுக்காததால், கோடை மகசூலும், தற்போதைய குறுவை சாகுபடியும் பொய்த்து வருகிறது. தமிழக, கர்நாடகா அணைகளில் நீர் குறைவாக உள்ளதால், குறுவை சாகுபடியை உறுதி செய்ய முடியவில்லை. அரிசி ஆலைகளுக்கான மின்சார நிலை கட்டணம், 5,000 ரூபாயில் இருந்து, கடந்த ஆட்சியில், 20,000 ரூபாயாக உயர்த்தினர். ஆலை இயங்காவிட்டாலும், 20,000 ரூபாயை செலுத்தியே ஆக வேண்டும் என்பதால், அந்த செலவினமும் அரிசி விலையில் ஏற்றப்படுகிறது.
இதனால் வரும் காலங்களில் அரிசி விலை மேலும் உயரும் சூழல் உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க, மாநில செயலர் கூறியதாவது:
கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து, அதிகளவில் சன்ன ரக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அந்த மாநிலங்களில், நெல் இருப்பு குறைவாக உள்ளதால், அங்குள்ள ஆலைகளின் தேவைக்கு போகவே, எங்களுக்கு நெல் கிடைக்கிறது. சில மாதங்களில், 1 கிலோ நெல்லுக்கு, 10 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. தவிர, லாரி வாடகையும் உயர்ந்துள்ளது. இதில், அதிகளவில் ஏற்றுமதியாகும் சீரக சம்பா அரிசி, 2025 ஏப்., மாதம், 84 ரூபாயாக இருந்தது. தற்போது, 180 ரூபாய் என விற்கப்படுகிறது. ஓராண்டில், கிலோவுக்கு, 96 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
வறட்சி, மழைப்பொழிவு இல்லாதது மற்றும் சன்ன ரக நெல் உற்பத்தி குறைந்ததால், அரிசி விலை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

